அங்கு அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற நிக்கலஸ் மடுரோ, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், பதவியேற்றார்.
ஆனால், தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாகவும், மீளவும் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த முறுகல் நிலை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த எதிர்க்கட்சி தலைவரும், சபாநாயகருமான ஜூவான் குவைடோ, தன்னை நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக பிரகடனம் செய்துகொண்டார்.
அவருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட 20க்கும் மேற்பட்ட வல்லரசு நாடுகளும் ஜூவான் குவைடோவுக்கு ஆதரவு தெரிவித்து, ஜனாதிபதியாக அங்கீரித்துள்ளன. அத்துடன் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும்படி, நிக்கலஸ் மடுரோவை ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
இந்த சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் திங்கட்கிழமை ஃபுளோரிடாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில், வெனிசுலாவின் தற்காலிக அரச தலைவராக அறிவித்துள்ள குவைடோவை ஆதரித்து உரையாற்ற உள்ளதாக மியாமி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜூவான் குவைடாவின் நியமனத்தை ஜனாதிபதி மடுரோ ஏற்க மறுத்துள்ளார். அத்துடன் குவைடோவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளுடன் மோதல் போக்கை கையாண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






