திமுக தலைவர் ஸ்டாலினிற்கு அரசியல் ஆண்மையில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.மேலூர் தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜெயலலிதா இறந்து 2 அரை ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வுடன் அகில இந்திய கட்சியான பா.ஜ.க இன்று கூட்டணி அமைத்திருக்கின்றனர். பா.ம.கவும் கூட்டணிக்கு வந்துள்ளனர்.
எல்லோரிடத்திலும் திறமையான பிரதமர் என பெயர்பெற்ற மோடி அ.தி.மு.க.விடம் கூட்டணி வைப்பது என்பது சாதாரண விஷயமல்ல.
வடமாநிலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் சில இடங்களில் வெற்றிபெற்றவுடனே, கருணாநிதி சிலை திறப்பு விழாவின் போது ஸ்டாலின், ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார்.
ஆனால் மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி நடத்திய பொதுக் கூட்டத்தில் அரசியல் ஆண்மை இருந்தால் அங்கே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் ஏன் சொல்லவில்லை.
இரட்டை வேடம் ஸ்டாலின் போடுகின்றார். பணத்திற்காக ராமதாஸ் அ.தி.மு.க.வுடன் விலை போய்விட்டார் என ஸ்டாலின் பேசுகிறார்.
தி.மு.க.வுடன் கூட்டணி என்றால் கொள்கையா? அ.தி.மு.க. என்றால் பணமா? மக்கள் சக்தி அ.தி.மு.க.விடமே உள்ளது என்று பா.ம.க முடிவு செய்துள்ளது.
ஜெயலலிதா இருந்த போது பா.ம.க 1998, 2009-ல் கூட்டணி வைத்திருந்த போது தோல்வி ஏற்பட்டதாக தி.மு.க. கூறுகின்றனர்.
ஆனால் வைகோ, பா.ம.க ஆகிய கட்சிகளின் சின்னங்களுக்கு அங்கீகாரம் தந்தவரே ஜெயலலிதா தான். சாக்கடை வசதி, மின்விளக்கு எரியாதது போன்றவை உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே காரணம் என ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டத்தில் அ.தி.மு.க. அரசை குறை கூறுகிறார்.
உள்ளாட்சி தேர்தலை நிறுத்த நீதிமன்றத்தில் தி.மு.க. தொடர்ந்த வழக்கே காரணம். ஆனால் அ.தி.மு.க. அரசை குறை கூறுகிறார்.
ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேசி வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 இடங்களிலும் வெற்றி பெறும்“ என தெரிவித்துள்ளார்.





