கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் சமூகத்தினர் ரயில் பாதைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.குறித்த போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மூன்றாவது நாளாக ராஜஸ்தான் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஐந்து ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதோடு, 15 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டுள்ளன.
பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதை தொடர்ந்து இந்த போராட்டத்தை மக்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இப்போராட்டத்தின் காரணமாக குறித்த பகுதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் டெல்லியில் இருந்து மும்பை மற்றும் ஜெயப்பூர் செல்லும் 5 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
இந்த போராட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் அசோக் கெலாட், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் என்றும், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ரயில் நிலையங்களில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை இந்த பிரச்சினை குறித்து தான் பிரதமரிடம் எடுத்துரைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.





