சவுதி அரேபியாவில் சிறைகளிலுள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான பாகிஸ்தான் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய சவுதி இளவரசர் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளார்.சவுதியின் முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மானின் பாகிஸ்தான் விஜயத்தையடுத்தே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சவுதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மானுடன் நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சந்தித்து பேசினார்.
இதன்போது, சவுதி சிறைகளில் உள்ள பாகிஸ்தான் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சவுதி இளவரசரிடம் அவர் விடுத்தார்.
அத்துடன் ஏழைத் தொழிலாளர்களாக சவுதிக்கு சென்ற இவர்களின் குடும்பத்தினர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் வருமானம் கிடைக்காத நிலையில் மிகுந்த சிரமப்பட்டு வருவதாகவும் இம்ரான் கான் சுட்டிக்காட்டினார்.
இதனையேற்ற இளவரசர், சவுதி அரேபிய நாட்டு சிறைகளில் உள்ள 2,107 கைதிகளை கருணை அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்யுமாறு இன்று உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் பவாத் சௌத்ரி தெரிவித்தார்.
அத்துடன் மீதமுள்ள கைதிகளின் விடுதலை தொடர்பாக சவுதி அரசு பரிசீலித்து வருவதாகவும் பவாத் சௌத்ரி குறிப்பிட்டுள்ளார்.
சவுதி அரேபிய சிறைகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் பல்வேறு குற்ற வழக்குகளில் விசாரணைக் கைதிகளாகவும், தண்டனை பெற்ற கைதிகளாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு நாளை இந்தியா வரும் சவுதி இளவரசரிடம் இதே கோரிக்கையை இந்திய அரசும் முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





