டெல்லி ஜந்தர்மந்தரில் நேற்று (புதன்கிழமை) இந்த பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்பாடு செய்த இக்கூட்டத்தில் பெரும்பாலான எதிர்க் கட்சிகள் பங்கேற்றன.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாவை வீழ்த்த எதிர்க் கட்சிகள் ஓரணியில் திரள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி ஆகியோர் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதற்காக சந்திரபாபு நாயுடு, டெல்லியில் எதிர்க் கட்சித் தலைவர்களை ஒன்று திரட்டினார்.
இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கடந்த மாதம் கொல்கத்தாவில் பிரமாண்ட கூட்டத்தை நடத்தினார். இதில் பெரும்பாலான எதிர்க் கட்சிகள் பங்கேற்றன.
இதன் தொடர்ச்சியாக எதிர்க் கட்சிகள் நடத்திய 3 ஆவது பிரமாண்ட கூட்டமாக நேற்றைய கூட்டம் அமைந்துள்ளது.
இந்தக் கூட்டத்துக்கு பின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஊடகவியலாளர்களிடம் கூறுகையில், “இந்திய அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தும் பா.ஜனதாவுக்கு எதிராக போராடுவது என்ற பிரதான இலக்குடன் அனைவரும் இணைந்து செயற்படுவோம்.
குறைந்தபட்ச செயற்திட்டத்தை உருவாக்கி தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை அமைக்கவுள்ளோம். இனிவரும் நாட்களில் நாங்கள் ஒன்றுபட்டு செயற்படுவோம்.
மாநிலத்தில் பிரச்சினை இருந்தாலும் தேசிய அளவில் ஒன்றுபட்டு தேர்தலை சந்திப்போம். நாட்டின் நலனுக்காகவே எனது வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டேன். அதற்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.






