
இந்தியாவில் அதிவேக ரயில் சேவை விரைவில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா அதிவேக ரயில்களை தயாரித்துவருகிறது.
இந்நிலையில், புதிதாக இந்தியா தயாரித்துள்ள அதிவேக ரயிலுக்கு இன்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக ரயில்வே துறை மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் பல வழித்தடங்களில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்களின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்காக அதிவிரைவு ரயில் பெட்டிகள் தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களிடம் கேள்விமனு கோரப்பட்டது.
ஆனால், வெறும் 315 பெட்டிகளைத் தயாரிக்க எந்த நிறுவனமும் முன்வராததால் வெளிநாட்டு தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்க தீர்மானிக்கப்பட்டது. முதல்கட்டமாக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு ரயில்களுக்கான பெட்டிகளை சென்னை வில்லிவாக்கம் அருகில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கும் பணிகள் தொடங்கியது.
இதேபோல், உத்தரபிரதேசம் மாநிலம், ரேபரேலி நகரில் உள்ள இணைப்புப்பெட்டி தொழிற்சாலையில் 97 கோடி ரூபாய் செலவில் 16 பெட்டிகளைக்கொண்ட அதிவிரைவு ரயிலும் 18 மாதங்களில் தயாரிக்கப்பட்டது.
இந்நிலையில், முற்றிலுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
