
ஜேர்மனியின் Eifel volcano பகுதியில் தாழ்வதிர்வெண் நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளதையடுத்து, இத்தகைய நிலநடுக்கங்கள் பொதுவாக பூமியின் ஆழத்தில் எரிமலைக் குழம்பு நகர்வதால் ஏற்படக்கூடியவை என்பதால், அப்பகுதியில் எரிமலை வெடிப்பு ஏற்படலாம் என கருதப்படுகிறது.
தென்மேற்கு ஜேர்மனியின் நிலநடுக்கங்களை ஆய்வு செய்யும் அமைப்பும், நிலவியல் ஆய்வு அமைப்பும், Karlsruhe தொழில்நுட்ப நிறுவனமும், North Rhine-Westphaliaவின் நிலநடுக்கங்களை ஆய்வு செய்யும் அமைப்பும் இந்த ஆய்வில் ஈடுபட்டன.
Geophysical நிறுவனத்தின் பேராசிரியரான Joachim Ritter இந்த நிலநடுக்கங்கள் பூமிக்கடியில் மிகவும் ஆழத்தில் உருவாகியுள்ளதாகவும், மிகவும் தாழ்வதிர்வெண் கொண்டவையாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மனிதனால் உணர முடியாத அளவுக்கு அவற்றின் அதிர்வெண் உள்ளதாக தெரிவிக்கிறார் அவர். இத்தகைய தாழ்வதிர்வெண் நிலநடுக்கங்கள், பூமியின் பரப்பிலிருந்து 10 முதல் 40 கிலோமீற்றர் ஆழத்தில் உருவாகின்றன.
இந்த தாழ்வதிர்வெண் நிலநடுக்கங்கள், உலகம் முழுவதிலும், பூமியின் ஆழத்தில் எரிமலைக் குழம்பு நகர்வதால் ஏற்படக்கூடியவை என்று கருதப்படுகின்றன.
ஆனால் இத்தகைய தாழ்வதிர்வெண் நிலநடுக்கங்கள் உயர் அதிர்வெண் நிலநடுக்கங்களுடன் இணைந்து வெளிப்படும்போதுதான் பொதுவாக எரிமலை வெடிப்பு ஏற்படும் என்பதால், உடனடியாக எரிமலை வெடிக்கும் என அஞ்ச வேண்டியதில்லை என்கிறார் பேராசிரியர் Ritter.
இதற்குமுன் Eifel எரிமலை 12,900 ஆண்டுகளுக்கு முன் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
