இம்முறை கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவிற்கான ஏற்பாட்டுக் கலந்துரையாடல் இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதெ அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து கலந்துகொள்ளவுள்ள பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் தங்குமிட வசதிகள், போக்குவரத்து உணவு உள்ளிட்ட பல தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு, பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கான ஏற்பாடுகள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்த பெருநாள் திருப்பலியில் யாழ்.மறைமாவட்ட ஆண்டகை பேர்னாட் யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
பெருவிழாவிற்கு செல்லவுள்ள பக்தர்களின் போக்குவரத்து ஏற்பாடுகள் மார்ச் மாதம் 15 ஆம் திகதி அதிகாலை 3.00 முதல் பேருந்துச் சேவைகள் இடம்பெறும், அத்துடன், காலை 5 மணிமுதல் படகுச் சேவைகள் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, பெருவிழாவாக நிர்ணயிக்கப்பட்ட இரண்டு நாட்கள் மாத்திரமே பக்தர்கள் ஆலயத்தில் தங்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
எனவே, அனைவரும் பெருவிழாவில் கலந்துகொண்டு அந்தோனியாரின் அருளைப் பெற வேண்டுமென்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில், நெடுந்தீவு பங்குத் தந்தை உட்பட மேலதிக அரசாங்க அதிபர், முப்படையினர், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், போக்குவரத்துச் சபையினர், படகுச் சேவையாளர்கள், உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.





