
கனடாவின் கியூபெக் நகர விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஃபோர்ட் லாடெர்டேல் விமான நிலையத்துக்கு புறப்பட்டு செல்ல எயார் ட்ரான்ஸாட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று காலை (உள்ளூர் நேரப்படி) சுமார் 11 மணியளவில் தயாரானது.
பயணிகள் ஒருவர்பின் ஒருவராக வந்து தங்களது இருக்கைகளில் அமரத் தொடங்கினர். சில நிமிடங்களில் அவர்கள் அனைவரும் கண் எரிச்சல், மயக்கம், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டனர்.
விரைந்து செயற்பட்ட மருத்துவ குழுவினர் பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக கீழே இறக்கி, முதலுதவி மற்றும் உரிய சிகிச்சை அளித்தனர். மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட 10 பயணிகள் அருகாமையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதைதொடர்ந்து, அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து நகர்த்தி, தனிப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
‘டிஐசிங்’ செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட தெளிப்பான்களின் நெடி காற்றுப்போக்கிகள் வழியாக விமானத்தின் உட்பகுதிக்குள் நுழைந்ததால் பயணிகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
