(பாண்டி)
தமிழர்களின் உரிமைகள் தொடர்பாக பேசுகின்ற தமிழ்த் தலைமைகள் கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் தேர்தல்களில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க ஒரணியில் திரண்டு தேர்தல்களில் போட்டியிட முன்வர வேண்டும் என்று முன்னாள் கிழக்கு மாகாணசபையின் சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரிலுள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர்
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பாராளுமன்றம், மாகாணசபை போன்றவற்றில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க ஒரணியில் திரண்டு தேர்தல்களில் போட்டியிட முன்வர வேண்டும். இதற்கு சரியான திட்டங்களைத் தீட்டி நடை முறைப்படுத்த வேண்டும்.
2009ம்ஆண்டுக்கு பிற்பட்ட காலகட்டத்தில் தமிழர்களிடமிருந்த துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்டதற்கு பிற்பாடு வடக்குகிழக்கில் போட்டித்தன்மை அதிகரிக்கப்பட்டு பண்மைத்துவத்தை ஏற்றுக் கொள்ளக் கூடிய நிர்ப்பந்தம் உருவாக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. இதன்அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப்பகுதிகளில் பல அமைப்புக்கள், தேசியக்கட்சிகள், புதிய அரசியற் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டு வெகுஜனரீதியாக ஒரு போட்டிக் களத்தை தமிழ்ப் பகுதியில் உருவாக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன. இதில் புதிய உருவாக்கமென்பது சரியா? பிழையா? என்னும் விவாதத்திற்கு அப்பால் இதனூடாக தமிழர்களின் வாக்குகள் பிரிந்து தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகின்ற சூழல் உருவாகியுள்ளன.
இதை நிவர்த்தி செய்யும் முகமாக தமிழ்த்தலைமைகள் கிழக்கு மாகாணம் தொடர்பாக பொது உடன்பாட்டுக்கு வரவேண்டும். அந்த உடன்பாடு என்பது தேர்தல் கூட்டிலாவது உடன்பட வேண்டும். அப்படி உடன்பட்டால் மாத்திரமே தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க முடியும். பலர் கொள்கைகளைப் பற்றிக் கதைத்தாலும், சரிபிழைகளைப் பற்றி பேசினாலும் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்கு விட்டுக் கொடுப்பும்,இணக்கப்பாடும்,சகிர்ப்புத்தன்மையும் அவசியமாகும்.
இதன் அடிப்படையில் எமது கட்சித் தலைமைகளுக்கும், ஈழமக்கள் பரட்சகர விடுதலை முன்னணியாகிய நாங்கள் கிழக்கு மாகாணம் தொடர்பாக தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்கு அனைவரிடமும் பொது உடன்பாட்டுக்கு வரவேண்டுமென கருத்துக்களை முன்வைத்திருக்கின்றோம். இக் கோரிக்கைகளை எமது கட்சி சாதகமாகக் பரிசீலிக்கும் என்பது திண்ணம்.
இதே போல கிழக்கு மாகாணத்தில் கட்சிகளை அறிமுகப்படுத்த வேண்டும்,சின்னத்தை அறிமுகப்படுத்த வேண்டும், கொள்கைகளை மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டும் என ஒவ்வாரு கட்சிகளும் முனையுமானால் தமிழர் பிரதிநிதித்துவத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். மூன்று மாவட்டங்களிலும் அரசியல் வெகுஜன ரீதியாக வேலை செய்தவன் என்ற அடிப்படையில் மூன்று மாவட்டங்களையும் உரைசிப்பார்த்தவன் என்ற வகையிலும் தமிழ்த் தலைமைகளுக்கு வேண்டு கோள் விடுக்கின்றேன்
தற்சமயம் மத்திய அரசின் ஒருவகையான திட்டமிட்ட இனப்பரம்பல் அமுலாக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன. தமிழர்களுடைய விகிதாசாரமும் நலிவடைந்து செல்கின்றன. முப்பது வருடங்களாக இனரிதீயான அரசியல் அதிகாரம் தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளன. கிழக்குமாகாணத் தமிழர்கள் தொடர்பாக வேண்டுமென்றே புரியாத புறக்கணிப்பு அமுலில் உள்ள நிலையில்
இதை உடைத்தெறிந்து தமிழர்கள் தங்களது பிரதிநிதித்துவம் ஊடாக ஆளுகை உள்ள தமிழர்களாக,அதிகாரமுள்ள தமிழர்களாக, அரசியற் செல்வாக்குள்ள தமிழர்களாக, போராட்டத்திற்கு வலுச்சேர்த்தவர்கள் என்ற தமிழர்களாக தலைநிமிர்ந்து நிற்பதற்கு ஒன்று பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்றும் தெரிவித்தார்.





