
அதிகநேரம் உறங்குவதும், குறைந்த நேரம் உறங்குவதும் இதயநோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி நேரம் வரை உறங்கவேண்டும். இல்லாவிட்டால் இதயநோய்ப் பிரச்சினைகளும், பக்கவாதப் பாதிப்பும் ஏற்படும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 35 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 632 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவருமே சரியாக உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள்.
கனடாவில் உள்ள மக்மாஸ்ரர் பல்கலைக்கழகம் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. ஆய்வுக்குழுவில் இடம்பெற்ற மாணவரான சுங்ஷி வாக்கன், ‘‘உறங்கும் நேரத்தை ஆறு மணி முதல் எட்டு மணி வரை கணக்கிட்டு ஆய்வு மேற்கொண்டோம்.
அந்த நேரத்தைக் கடந்து அதிகம் உறங்குபவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். இதயநோய்ப் பாதிப்புக்கு உள்ளாகி மரணத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
இந்த ஆய்வின் முடிவில், பரிந்துரைக்கப்பட்ட நேரத்தை கடந்து 8 முதல் 9 மணி நேரம் வரை உறங்குபவர்களுக்கு 5 சதவீதம் நோய்ப் பாதிப்பு அதிகரிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
தினமும் 9 முதல் 10 மணி நேரம் உறங்குபவர்களுக்கு இதய நோய்ப் பாதிப்பு 17 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்பது தெரியவந்துள்ளது.
10 மணி நேரத்துக்கும் மேலாக உறங்குபவர்களுக்கு இதயநோய்ப் பாதிப்பு 41 சதவீதம் அதிகமாக இருக்கும். அதுபோல் 6 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாகத் உறங்குபவர்களுக்கு 9 சதவீதம் நோய்ப் பாதிப்பு அதிகரிக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
