திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள கடைகள் அனைத்தும் அகற்றப்பட்ட வேண்டும் இவை ஆலயத்தின் புனிதத்தன்மைக்கு
பாதிப்பை ஏற்படுத்துவதுடன் இயற்கை சமநிலையை சீர்குலைப்பதாக திருகோணமலை நகராட்சி மன்ற தலைவர் நா.இராசநாயகம் தெரிவித்தார்.
இன்று (03) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கடைகளை அவ்விடத்தில் இருந்து அகற்றி மலையடிவாரத்தில் அமைப்பது தொடர்பாக இடம் பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ புஸ்பகுமார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த புஞ்சிநிலமே மற்றும் க.துரைரெட்ணசிங்கம் மற்றும் அதிகாரிகள் திருக்கோணேஸ்வரர் ஆலய பரிபாலனசபையினர் நகராட்சி மன்ற உறுப்பினர்கள் கடை வியாபாரிகள் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
தொடர்ந்து அவர் பேசும் போது நாட்டில் உள்ள ஏனைய புனித பிரதேசங்களான அனுராதபுரம், தலதா மாளிகை போன்ற இடங்களில் ஆலயங்கள் உள்ள இடங்களுக்கு அருகாமையில் இவ்வாரான வியாபாரநிலையங்கள் அமைந்திருப்பது இல்லை ஆலயங்களுக்கு சற்று தொலைவிலேயே வியாபாரநிலையங்கள் அமையப் பெற்றுள்ளது.
இவ்வாறு ஆலயத்தின் அருகில் இந்த கடைகள் அமைந்திருப்பதனால் திருகோணமலை நகரத்தில் அழகை ஆலயத்தில் இருந்து பார்க்கும் பார்வை முகம் மறைக்கப்பட்டுள்ளது.மேலும் இக்கடைகள் அனுமதி இற்ற கடைகளாகவே காணப்படகின்றது. நகராட்சி மன்றம் வீதி அபிவிருத்தி திணைக்களம் தொல்பொருள் திணைக்களம் கரையோர பாதுகாப்பு திணைக்கம் போன்ற திணைக்களங்களில் அனுமதி பெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடரந்து இடம் பெற்ற பலருடைய கருத்துக்களுடன் இந்த விடயம் தொடர்பாக அதிகாரிகள் அரசியல்வாதிகள் அடங்களாக ஒரு குழு ஒன்றை அமைத்து எவருக்கும் தீங்கு ஏற்படாத வண்ணம் சுமுகமாக தீர்க்க நடவடிக்கை மேற் கொள்வதாக இக்கலந்துரையாடல் நிறைவடைந்தது.
(அ . அச்சுதன்)





