முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஆணையத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் முன்னிலையானார்.ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையகம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் வாக்கு மூலமொன்றை பெற்றுகொள்வதற்காக இன்று ஆணையகத்தில் முன்னிலையாகுமாறு ராதா கிருஷ்ணனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய இரண்டாவது முறையாகவும் ராதா கிருஷ்ணன் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்துள்ளார்.
குறித்த விசாரணை காலை 10.20 மணியளவில் ஆணையகத்தில் நடைபெற்றுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை அரசு அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், அப்பல்லோ வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், போயஸ் கார்டன் ஊழியர்கள், எய்ம்ஸ் வைத்தியர்கள் உட்பட பலர் ஆறுமுகசாமி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





