
சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடிய ஒருவர் நாவந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இச்சம்பவத்தில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட போதும் அங்கிருந்து அவர் தப்பி சென்றுள்ளார்.
தப்பிச் சென்றுள்ளவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும் சமையல் வேலைக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சந்தேகநபரை பொலிஸார் திட்டமிட்டே தப்பிக்கவிட்டுள்ளதாகவும், சிறுமிகளைக் கடத்தும் அவரால் சமூகத்துக்கு ஆபத்து உள்ளதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தப்பிச் சென்றவரைக் கைது செய்யப் பொலிஸார் தவறினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்துப் போராட்டம் நடத்துவோம் என்றும் நாவாந்துறை மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறுமியை கடத்த முயற்சித்தவர் நையப்புடைப்பு – நாவாந்துறையில் சம்பவம்!
சிறுமி ஒருவரை கடத்தும் நோக்குடன் நடமாடினார் என்ற சந்தேகத்தின் பேரில் சந்தேகநபர் ஒருவர் மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் இன்று(புதன்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தேகநபர் கடந்த வாரம் நாவாந்துறைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமியை கடத்திச் செல்ல முற்பட்டார் என்றும், அதேபோன்று இன்றைய தினமும் சிறுமியை கடத்தும் நோக்கோடு அந்தப் பகுதிக்கு வந்ததாகவும் கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணம் நாவாந்துறை சந்தைப்பகுதியில் இன்று காலை சந்தேகத்துக்கிடமான வகையில் குறித்த நபர் நடமாடியுள்ளார். நாவாந்துறை சந்தைப் பகுதியில் கூடியிருந்தவர்கள் அவரைப் பிடித்து கட்டிவைத்து நையப்புடைத்ததுடன், யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
எனினும், 2 மணிநேரத்துக்கு பின்னரே பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சிறுமியை கடத்த முற்பட்டவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் எனவும் சமையல் வேலைக்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிஸார், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
