மாலியின் வடக்குப் பகுதியில் இஸ்லாமிய போராளிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்காப்பாளர்கள் பத்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.ஞாயிறன்று Aguelhok பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முகாம் ஒன்றின்மீது துப்பாக்கிதாரிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலின் போது 25 கனேடிய படையினர் காயமடைந்ததாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மாலியில் இயங்கிவரும் இஸ்லாமிய போராளிகளை எதிர்த்து போராடும் நோக்குடன் 2013 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையினால் இந்த முகாம் அமைக்கப்பட்டது. இதையடுத்து ஐ.நா மற்றும் மாலியன் துருப்புகள் மீது தொடர்ந்தும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திவருகின்றனர்.
இத்தாக்குதலுக்கு அல்-கொய்தா தீவிரவாதக் குழுவின் வட-ஆபிரிக்கக் கிளை உரிமை கோரியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இறந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த ஐ.நா செயலாளர் நாயகம் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் மிக விரைவில் நீதிக்கு முன் கொண்டுவரப்படுவார்களெனவும் உறுதியளித்தார்.





