பிரான்ஸில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டமானது, ஜனநாயகம், மனித உரிமை மற்றும் சுதந்திரத்தில் ஐரோப்பிய நாடுகள் தோல்விகண்டுள்ளதையே வெளிக்காட்டுகின்றது என துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் கூறியுள்ளார்.இஸ்தான்புல்லில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பேரணியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் செயற்பாடு மட்டுமன்றி, அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாதென இதன்போது துருக்கி ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும் இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராகவும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராகவும் செயற்பட்ட பிரான்ஸில், தற்போது சொந்த நாட்டு மக்களே அதன் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் எர்டோகன் கூறியுள்ளார்.
அத்தோடு, ஆர்ப்பாட்டங்களில் ஏந்தப்பட்ட கொடிகள் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புபட்டவை என்றும் கூறியுள்ளார். இது, பிரான்ஸில் பிரிவினைவாதக் குழுக்கள் தற்போதும் செயற்படுவதை எடுத்துக்காட்டுவதாக எர்டோகன் கூறியுள்ளார்.
ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் மேற்கொண்ட எரிபொருள் சீர்திருத்தமானது, பிரான்ஸில் பாரிய போராட்டங்களுக்கு வித்திட்டுள்ளது. ‘எலோ வெஸ்ட்’ என்ற அமைப்பினால் கடந்த 4 வார காலமாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, நேற்றைய போராட்டத்தில் மாத்திரம் சுமார் 1000 பேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






