LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, December 10, 2018

இறைவன் நம் நடுவேதான் -1- 41


அவர் வரையில் வந்த இறைவாக்கினர்களை விடவும் இறை வார்த்தைகளை அர்த்தப்படுத்துவதில் அவர் போல வேறு யாரும் இருந்ததில்லை. சிறு வயதிலே ஆலயத்தில் காணிக்கை தர வந்த பெற்றோரை அவர் பிரிந்து மூன்று நாட்களாக இறை வார்த்தை வல்லுனர்களோடு அவர் போன்று 12 வயதில் தர்க்கித்து அர்த்தம் சொன்னவர்கள் வேறு யாரும் வந்ததில்லை. அவர் போன்று அர்த்தமுள்ள வகையில் இறை வார்த்தையை, நற்செய்தியைப் போதித்தவர் வேறு ஒருவரும் இருந்ததில்லை. அவர் தம் சொல்லோடு செயலையும் கலந்து தம் வார்த்தைகள் வலுவுள்ளதாக இருப்பதை உறுதி செய்தார். இதனால் பாமரர்களும் அவர் சொன்னதைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. “எளியோர்க்கு நற்செய்தி அறிவிக்க வந்தவரல்லவா அவர்”. “என் நுகம் எளிது, என் சுமை எளிது” என்றவர் அதற்கேற்ற வகையில் அதிக பாரம் இழுக்கத்தக்க வகையில் எளிதான நுகங்களைச் செய்து கொடுத்தார்;.
வேதாகம சுவடிகளைக் கரைத்து குடித்ததாக இறுமாப்புக் கொண்டு நெற்றியில் பட்டயம் எழுதி வைத்து இருந்தவர்களால், அந்த முன்னோர்களின் வார்த்தைகளிலிருந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் வர வேண்டிய கால கட்டம், அவர் வந்த காலகட்டம், அவரது வருகைக்கு முன்னோடியாக நடைபெற்றிருக்கக் கூடிய நிகழ்வுகள் குறித்து சற்றும் அறிவில்லாதவர்களாயிருந்ததுதான் அதிசயம். அவர்கள் அறியாமல் இருந்தார்களா? இல்லை அறியாதது போல் நடித்தார்களா? தெரியவில்லை. அவர் மெசியா என்பதை ஏற்றுக் கொண்ட சாதாரண மனிதர்களை விடவும் அவர்களது கண்களைப் போன்று அறிவும் மழுங்கிப்போய் இருந்தது. இதனால் உண்மையை அவர்களால் கண்டு கொள்ள முடியவில்லை. ஏற்றுக் கொள்ள முடியவில்லை, கால ஓட்டத்தோடு இணைந்து கொள்ளவும் முடியவில்லை.
அதிகாரத்தோடு அவர் போதித்ததை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தம்மை விட அதிகாரமுள்ளவரை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் சென்ற இடமெல்லாம் தொடர்ந்து சென்று அவரை மடக்க முனைந்தவர்கள் முடங்கிப் போனார்கள். அவருயை ஞானம் அவர்களையெல்லாம் முடமாக்கிப் போட்டது. நிறைய திட்டுக்களை, அர்ச்சனைகளை அவர் வாயால் கேட்டதுதான் மிச்சம். இதனால் வெட்கித்துப் போனவர்கள் அவர் இருந்தால் தம் இருப்புக்கு ஆபத்து என்பதைத் தெரிந்து கொண்டு அவரை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டியதாயிற்று.
பாவிகள் என்று தம்மால் அடையாளம் சூட்டியவர்களை மன்னித்து தம்மில் ஒருவராக அவர் மாற்றியமைத்துக் கொண்டபோது மேற்கொண்டு என்ன செய்வதென்றே அவர்களுக்குத் தெரியவில்லை. தன்னைப் பின் தொடர்ந்து தன் போதனைகளுக்குச் செவிமடுக்க வந்த மக்களுக்கு அவர்களுடைய வகை தொகை பாராது உணவளித்தபோது அவர்களால் அதை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக செத்தவரை உயிரோடு மீண்டும் வரப் பண்ணியபோது இவர்கள் வாய் அடைத்துப் போயிற்று. திருமுழுக்கு யோவானை ஏரோதுதான் அழிக்க முனைந்தான், இவரையோ முழு அதிகார வர்க்கமுமே அழித்தொழிக்க முனைந்தது எந்தளவுக்கு அவர் அச்சுறுத்தலாக அவர்களுக்குத் தெரிந்தார் என்பதை எடுத்துக் காட்டப் போதுமானதாக இருந்தது.
உண்மையில் அவர் அவர்களுக்கொரு சிம்ம சொப்பனமாகவே அமைந்திருந்தார். அவர் சொன்னது புதிய வேதம். அவர் காட்டியது புதிய வழி. அவரது முயற்சிக்கு முட்டுக் கட்டை போட அவர்கள் கையாண்ட ஒரு வழிதான் அவரை அவமானப்படுத்தி ஓரங்கட்ட அவர்கள் கையாண்ட வழி. தம் சொந்த ஊரிலேயே அவரை மடக்கி விட்டால் வேறு எங்கு எந்த முகத்தோடு அவர் போவார்? என்கின்ற தப்புக் கணக்கைப் போட்டார்கள்.

ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்

(தொடரும்)






 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7