மேற்கு திசை பக்கமாக ஒரு ஜன்னல்கொஞ்சம் சொற்களை வைத்து ஒரு வீடொன்று அமைக்கிறேன்
மேற்கு திசை பக்கமாக ஜன்னல் ஒன்றையும் கிழக்கு திசை பக்கமாக
கதவொன்றினையும் வைத்து விட்டு
திறந்து பார்க்கிறேன்
வண்ணத்திப்பூச்சிகளும்
இன்னும் சில பறவைகளும் சொற்களாக
வீட்டுக்குள் நுழைந்து
நாற்காலியாகவும் ஊஞ்சலாகவும் அமர்கின்றன
நான் அவ் ஊஞ்சலில் அமர்ந்து
ஆடிக் கொண்டிருக்கிறேன்
சொற்களெல்லாம்
என் எண்ணங்களில் குமிந்து
நான் வளர்க்கும் பறவைகளாக மாறுகின்றன
எனக்கு தேவைப்படும் போது
அவைகளை கவிதைகளாக்கி
காற்றோடு கலக்கச் செய்கிறேன்
இப்போது என் ஜன்னலைத் திறந்து
ஒரு கவிதை பறக்கத் துவங்குகிறது
இன்னும் சில வினாடிகளில்
நீங்களும் வாசிக்கத்துவங்கலாம்
ஏ.கே. முஜாரத்





