
தாதா சாகேப் பால்கே உட்பட பல்வேறு சிறப்பு விருதுகளை பெற்ற பிரபல வங்காளம் மொழி திரைப்பட இயக்குநரான இவர் இந்திய திரைப்படங்களை உலகத் தரத்துக்கு உயர்த்திய திரைப்பட இயக்குநர்களில் முக்கியமானவர்.
ஹிந்தி, தெலுங்கு, ஒடிசா, வங்காளம் ஆகிய 4 மொழிகளில் சுமார் 30 திரைப்படங்கள், 14 குறும்படங்கள் மற்றும் 4 ஆவணப்படங்களை மிருணாள் சென் இயக்கியுள்ளார்.
இவர் இயக்கிய ‘நீர் ஆகாஷெர் நீச்சே’ (நீல வானத்திற்கு கீழே) என்ற திரைப்படத்தை இவருக்கு இந்திய அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தது. மூன்றாவதாக ‘பைஷே சிரவன்’ (இரவீந்திர நாத் தாகூர் இறந்த அன்று) என்ற திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததோடு, இவருக்கு உலக அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
இவரின் திரைப்படங்கள் நடுத்தர வகுப்பு மக்களின் குடும்பப் பிரச்சினைகளை சித்தரிக்கும் படங்களாக, குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை ஆகும்.
சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது, சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது மற்றும் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதுகளை இவர் பலமுறை பெற்றுள்ளார்.
இவரின் பல திரைப்படங்கள் இந்தியாவில் விருதுகளை வென்றது மட்டுமல்லாது கேன்ஸ், பெர்லின், வெனிஸ், மொஸ்கோ, சிக்காகோ, கெய்ரோ உள்ளிட்ட அனைத்து உலகத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு, விருதுகளை வென்றன.
இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது, பத்மபூஷண் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கி சிறப்பித்தன.
இந்நிலையில் முதுமையில் நோயால் அவதிப்பட்டு வந்த மிருணாள் சென் இன்று காலை 10.30 மணிக்கு காலமானார் என்று அவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். மிருணாள் சென்னின் மனைவி கீதா சென் கடந்த ஆண்டு காலமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மிருணாள் சென் மறைவுக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “முதுபெரும் திரை இயக்குநர் மிருணாள் சென் மறைந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். புவன் ஷோம், கொல்கத்தா ஆகிய திரைப்படங்கள் இவரின் திறமைக்கும், நாட்டின் சமூக விஷயங்களையும் அந்த காலத்தில் உணர்த்தின. பெங்கால் மக்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும், உலக சினிமாவுக்கும் அவரின் மறைவு இழப்பாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
இவரது மறைவுக்கு திரைப்பட மற்றும் அரசியல் துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
