
கட்டுக்கடங்கா சிறுவர்களைபோல்
கத்திக் கூச்சலிட்டுப்
பொடுபொடுக்கிறது பேய் மழை
பின்னர் குழந்தைகள் மாதிரி
ஊசித் தூறலென
ஓய்விலாது சிணுங்குகிறது
ஒரு பொழுது தாண்டியும்
என்னை சிறைப்படுத்துகிறது
வெளியில் சென்று
காரியமாற்ற விடுகின்றதில்லை
வானம் சிவந்திருப்பதை உணர்ந்து
வெளியில் செல்கையில்
இடையில் திடிரென பெய்து
பயணத்தை தொப்பாக்குகிறது
குழந்தைகளை ஆற்றுப்படுத்த
இனிப்புளை கொடுக்கிறேன்
பொம்மைகளை பரிசளிக்கிறேன்
உப்பு மூட்டை சுமந்து விளையாடுகிறேன்
தாலாட்டுப் பாடி உறங்கவைக்கிறேன்
ஆனல் என் வாசலுக்கு பிரசன்னமாகும்
இந்த மழைக் குஞ்சுகளை
எப்படி சமாளிப்பதென்று தெரியவில்லை
சொல்லாமல் வருகிறத
சொல்லிக்கொள்லாமல் போகிறது
கருமம் பூத்திருக்கும் ஆடைகளை உலர்த்திட
சூரியனை சற்று நேரம்
வெளியில் உலாவ விடுகிறதில்லை
மலக்கிடங்கு நிரம்பும் வரைதான்
இந்த மழையை என்னால் ரசிக்கு முடியும்
அதற்கப்பால் என்ன செய்யலாமென கருதுகிறீர்கள்
இருந்தும் மழையை நிராகரிக்க மனசில்லைதான்
வானம் கறுத்திருக்கும் இந்நேரம்
இதன் ஓயாத நச்சரிப்பு
என்னை இப்படி புலம்ப வைக்கிறது
0
ஜமீல்
