
காற்றின் சேலைக்குள் மறைந்துகொண்டு
மெதுவாக நடந்துவந்த
மெல்லிய இசை கேட்டு
தோழ் மீது சாய்ந்து போகிறது
அழகான பின்னேரம்
தோட்டம் நிறைய
நான் எழுதிய கவிதைகளெல்லாம்
ஆனந்த இன்ப நடனமாடிக் கொண்டிருக்கின்றன
தாழாத மகிழ்ச்சியில்
முகம் மலர்ந்து நிற்கின்றேன் நான்
இன்று எனக்குப் பாராட்டு விழா
தேனூறி வடியும்
செந்தாமரைப் பூக்களே வருக
மஞ்சள் பூசி சந்தணம் மணக்கும்
மல்லிகைக் கொடிகளே வருக
இங்கு
கை தட்டவும், வாழ்த்துச் சொல்லவும்
ஒருவருமில்லாத போதும்
பொன்னாடையை எடுத்து
நானே எனக்குப் போர்த்திக்கொள்கின்றேன்
எனது உயிருக்கும்,
மனசுக்கும் தெரியாமல்
ரகசியமாகச் சொல்லுங்கள்
நான் சந்தோசமாக இருக்கின்றேனா?
வீட்டுக்கு வரும்
ஒற்றையடிப் பாதையே சொல்லுங்கள்
இப்போது நான்
சந்தோசமாக இருக்கின்றனா?
எப்படித்தான் மனசுக்கு
ஆறுதல் சொன்னாலும்
பாவம்
நாளைக்கு
எனது கவிதைகளெல்லாம்
கேட்கப் பார்க்க ஆளில்லாத
அனாதைகளாகப் போகப் போகின்றன.
முகம்மது றியால்
