
மண் கொள்ளை நடைபெறும் கேந்திர நிலையமாக இறால் குழி கிராமம் மாறியுள்ளது;
திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிதியத்தின் தலைவர் தெரிவிப்பு!
கடந்த காலவன் செயல்களின் போது காலம் காலமாக வாழ்ந்திருந்த மூதூர் நகர தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து தஞ்சமடைந்திருந்த தமிழ் கிராமம் இறால் குழி என்பது நினைவிலிருந்து அகன்று விடலாகாது, இச்சம்பவத்தை அனுபவித்தவன் என்ற வகையில் குறிப்பிடுகிறேன் என நேற்று இறால் குழி மாணவர்களுக்கு திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிதியத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்த நிகழ்வில் நிதியத்தின் தலைவர் கனகசபை தேவகடாட்சம் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்
ஒரு புறம் கடல்வளமும் மறுபுறம் மகாவலிகங்கை நீர்வளமும் அமைந்த வளமான கிராமம் தற்போது பூர்வீக நிலங்களும் அபகரிக்கப்பட்டு வருவதோடு மட்டுமல்லாது இலங்கையின் மிகப்பெரிய மண் கொள்ளை நடைபெறும் கேந்திர நிலையமாகவும் இறால் குழி கிராமம் மாறியுள்ளது வேதனையாகும், இந்த நிலையை மாற்றுவதற்கு எந்த அரசியல் தலைமைகளும் முன்வருவதற்கு ஆயத்தமில்லை இதனால் எமது தாய் மண் நிலம் என்ற கோட்பாட்டில் இதனை பாதுகாக்க இங்குள்ள இளைஞர்கள் கல்வியால் உயர் நிலைக்கு வரவேண்டும் அதற்கு பெற்றோர், சமூகம், நலன்விரும்பிகள் மாணவர்களின் கல்வியில் அக்கறைகாட்ட வேண்டும் இது ஒன்றே இம் மண்ணைக் காப்பாற்ற ஒரேவழி வேறு எவரிலும் தங்கியிருந்து வெற்றி கொள்ளமுடியாது என்றார்.
இந்நிகழ்வில் கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்
.
அ . அச்சுதன்
