
கண்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநாயக்க தேர்களைச் சந்தித்து ஆசிபெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் லக்ஸ்மன் கிரியெல்ல இன்று தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார்.
அதனை அடுத்து, மல்வத்துபீட மாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
“பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்தோம். அதன் களைப்பு இன்றும் உள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஆரம்பிக்கப்பட்டு 40 வருடம் ஆகின்றது.
முதற்தடவையாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அது எம் அனைவருக்கும் பாரிய பலம். அந்த தீர்ப்பில் ஒரு சரத்து உள்ளது.
அதாவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என்றால் அதன் பின்வரும் தேர்தலும் சட்டவிரோதமானது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 19 ஆவது அரசியல் அமைப்புக்கு அமைய நீதிமன்றத்திற்கு சுயதீனமாக செயற்பட அனுமதி வழங்கியமையே இதன் வெற்றி.
இன்று நாடாளுமன்றமும், நிறைவேற்று அதிகாரமும், நீதிமன்றமும் சமநிலையில் உள்ளன. அந்தந்த பிரிவுகளில் அவரவருக்கு ஏற்ற கடமைகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இது நாட்டுக்கு சிறந்தது”‘ என அவர் மேலும் குறிப்பிட்டார்.
