
தமிழகத்தின் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.
இதன்போது மத்திய சென்னை, வட.சென்னை, திருச்சி, மதுரை மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியிருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“நகரமயமாக்கலை சவாலாக கருதாமல், எமக்குக் கிடைத்த வாய்ப்பாக கருத வேண்டும் எனவும், அடுத்த 20 ஆண்டுகளில் வேகமாக வளரும் நகரங்களின் சிறந்த 10 பட்டியலில் இந்தியாவில் உள்ள நகரங்கள் தான் இடம்பெறும். இதில், தமிழகத்தில் உள்ள 3 நகரங்கள் இடம்பெறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
எதிர்வரும் காலங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல், எய்ம்ஸ் மருத்துவமனையும் மதுரையின் பெருமைகளில் ஒன்றாக இருக்கும்.
காங்கிரஸ் கட்சி தற்போது அமைத்துள்ள கூட்டணி, மக்கள் நலனை மறந்து சுயநலத்திற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டணி மக்களை ஏமாற்றும் ஓர் அணியாகவே இருக்கப் போகின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.
