இது ஒரு காலம்மேடைகள் புழுக்கும் காலம் வருகிறது
நீந்தி நீந்தி சுருள இடமற்று
தென்னையின் முதுகில் அடிபட்டு
வாழையை வெட்டிச் சரித்து
பள்ளம் படுகுழிகளில் விழுந்து நசிய
வாய்க்குள்ளிருந்து குதிக்கும்
புழுக்கும் காலம்.
சந்திரனை அழைத்து
வாசல்களில் உட்காரச் செய்து
வெள்ளிகளை அள்ளிக் கொட்டித் திலாவ
சூரியனுக்கு ஒரு மூலையை உட்கார ஒதுக்க
மேடை ஒரு மந்திரக்கோல்போல பேசும் இந்த புழுக்கும் காலம்.
உயர்ந்து பேசுகின்ற உத்தம நட்சத்திரங்கள்
இன்றே நாளையை மறந்து
முகங்களை மறைத்து
வேறொரு பயிருக்கு நீரூற்ற வாளியைத் தேடிக்கொண்டிருக்க
எல்லாப் பட்சிகளும் பூச்சிகளும்
மிருகங்களும்
அருந்திக்கொண்டிருக்கும் நீரை.
இறக்கைகள் கொடுகிப்போயின
ஒரு பெருவெளியில் தகித்துக்கொண்டிருந்தேன்
என்னைச் சுற்றி வட்டம்போடும் பருந்தின் ஆசையில் என் இறக்கைகள் கொடுகிப்போயின.
எனக்குத் தெரிந்திருந்த பற்றைக்குள் ஒளிந்தேன்.
என் கண்களைக் கட்டிக்கொண்டு
ஒரு மரநிழலில் அமரச் சொன்னது புதர்.
காற்றுக்குக் கவலை வந்து என்னைத் தள்ளிக்கொண்டு சென்றது.
இருளை ஊடறுத்த ஒரு சத்தத்தில் கனவின் ஆயிரம் பக்கங்கள் கிழிந்தன.
மெல்லப் புன்னகைத்த நிலவில்
ஒரு கொடூரம் நிகழாதபடி
மின்மினிப் பூச்சி ஒன்று தன் பின்புறத்தை
உரசிக்கொண்டே போனது.
என்னைச் சுற்றி வட்டம்போடும் பருந்தின் ஆசையில் என் இறக்கைகள் கொடுகிப்போயின.





