
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி தமது துருப்புக்களையும் மீள அழைத்திருந்தார். இதுகுறித்து, மொஸ்கோவில் வைத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கிய போதே, ரஷ்ய ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தோற்றுவிட்டார்கள் என்ற அமெரிக்க ஜனாதிபதியின் நிலைப்பாட்டுடன் நான் உடன்படுகிறேன். இது குறித்து நான் கலந்துரையாடியிருக்கிறேன். அங்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டம் முன்னேற்றம் அடைந்துள்ளது.
ஐ.எஸ். தோல்வியை நான் ஏற்பதுடன், அவர்களுக்கு எதிராக நாம் கடுமையாக சண்டையிட்டுள்ளோம். கடும் தாக்குதல்களையும் நடத்தியுள்ளோம். இவ்வாறான குழுக்களினால் அண்டைய நாடுகளிலும் அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து திரும்பிவர அவர்கள் முயற்சிக்கிறார்கள். இது எங்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.
ஆனாலும், அமெரிக்க துருப்புக்களை மீள அழைக்கும் முடிவு என்ன என்று எனக்கு தெரியாது. ஆப்கானிஸ்தானில் 17 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க துருப்புக்கள் நிலைகொண்டுள்ளன.
ஒவ்வொரு வருடமும் அவர்கள் அங்கிருந்து வெளியேறுவார்கள் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் அவர்கள் வெளியேறவில்லை. அவர்கள் அங்கேயே நிலைகொண்டுள்ளார்கள். அங்கிருந்து துருப்புக்களை மீளப் பெறுவதற்கான அறிகுறிகளை நான் காணவில்லை. ஆனால் அது சாத்தியப்படும் என நான் நினைக்கிறேன்.
இந்நிலையில், அமெரிக்க படைகள் சிரியாவில் நிலைகொள்ள வேண்டியது அவசியமா? என்றால் இல்லை என்பதே எனது நிலைப்பாடு.
அவர்கள் சிரியாவில் சட்ட ரீதியாக நிலைகொள்ளவில்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானத்திற்கு அமைவாக அல்லது சிரிய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாகவே அங்கு நிலைத்திருக்க முடியும்.
நாம் சிரிய அரசின் கோரிக்கைக்கு அமைய அங்கு இருக்கிறோம். ஆனால் அமெரிக்க துருப்புக்களை யாரும் அழைத்திருக்கவில்லை. எனவே அவர்களை மீள அழைத்தமை சரியான முடிவே” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
