
கிங் ஸ்ட்ரீட் மற்றும் ஸ்பேடினா அவென்யூ பகுதியில், நள்ளிரவு இடம்பெற்ற அந்த இரட்டை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவித்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் ரொறன்ரோ பொலிஸார் தகவல் வெளியிடுகையில், வீதிச் சோதனைகளில் ஈடுபட்டிருந்த தமது அதிகாரிகளுக்கு துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதை அடுத்து, சமபவ இடத்திற்கு அவர்கள் விரைந்ததாகவும், அங்கே ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
கழுத்துப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் காணப்பட்ட, 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், உயிராபத்தான நிலையில் உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் காணப்பட்ட பெண்ணுக்கு காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் கூறப்படுகிறது.
