அப்போது இறைவன் பவுலடியானுக்கு பதிலாக “என் அருள் உனக்குப் போதும், வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” என்று கூறி அந்த பலயீனமானது அவரது பலத்தை எடுத்துக் காட்டவே தரப்பட்டிருக்கின்றது என்று புரிய வைக்கின்றார். அதை பவுல் ஏற்றுக் கொள்கின்றார். தன் பலயீனம் தனக்குத் தரப்பட்ட இறை வரம் என்பது குறித்தும் அவர் பெருமை கொள்கின்றார்.
பலயீனங்கள் நம்மை அடையாளப்படுத்தி வைக்கக் கூடும், அதுபோல இறைவனும் அந்த பலயீனத்தினூடாக எம்மை பலம் கொண்டவராக மற்றவர் முன்னிலையில் அடையாளம் காட்டுவதற்காக நமக்கு ஏற்பாடு செய்கிறார் என்பதையும் நாம் நினைவிற் கொண்டு வாழவேண்டும். நம்;முடைய பலயீனங்;கள் நம்மை மற்றவர்களது பொறிக்குள் சிக்க வைக்கவும் நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன. மற்றவர்களது பலயீனத்தைப் பயன்படுத்தி தம் வாழ்வை வளப்படுத்திக்
கொள்ள முனைபவர்கள் நம் மத்தியில் ஏராளமாக இருக்கின்றார்கள். என்று எம்மை எம் பலயீனத்திற்கு நாம் அடிமையாகி எம்மை இழக்கின்றோமோ, அன்றே நாம் எம்முடைய தனித்துவத்தை, அடையாளத்தைத் தொலைத்து விடுகின்றோம். அதற்கு இடம் கொடுக்காமல் எதிர்த்து நின்று போராடும்போதுதான் நமது பலம் நமக்கே தெரிய வரும். நாம் அடுத்தவர்க்கு அடிமைகளாகாமல், எமது அநியாயமான ஆசா பாசங்களுக்கு இடம் கொடுத்து விடாமல், நமது சுயத்தைக் காத்துக் கொள்ள உறுதியுடன் பேராடுகின்றபோது நமது பலம் அடுத்தவர்க்கு மட்டுமல்ல நமக்கும் கூட தெரிய வரும்.
நமது பலயீனம் நம்மை இடறவைக்க முனையும்போது நாம் இறைவனிடம் பவுல் அடியார் போன்று சரணடைந்து வேண்டிக் கொண்டால், இறைவன் எமது துன்பத்தை அகற்றிவிடாது போனாலும்;, நமது பலம் வெளிப்படும்படியாக நாம் போராட நமக்கு நிச்சயம் அருள் தருவார் என்கின்ற நம்பிக்கையுடன் நமது எதிர்காலத்தை எதிர்கொள்ளுவோம்.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்






