
முதியவர்களைக் குறிவைத்து நூதன முறையில் வழிப்பறி செய்துவந்த 2 பேரை கொரட்டூர் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை பாடி வடக்கு மாடவீதியைச் சேர்ந்தவர் கோபிநாத்(71). டிவிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் காலையில் பாடி ராஜா தெருவில் கோபிநாத் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த இருவர் சிவன் கோயிலுக்கு செல்லவழி கேட்டுள்ளனர். அந்த முகவரியில் தங்களை கொண்டு விடுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டதை நம்பி, கோபிநாத் ஆட்டோவில் ஏறியுள்ளார். ஆட்டோவில் இருந்தவர்கள் நடுவழியில் கோபிநாத்தை மிரட்டி அவரிடம் இருந்த 3 பவுன் செயின், மோதிரத்தைப் பறித்துக் கொண்டனர். பின்னர் வள்ளுவர் கோட்டம் அருகே கோபிநாத்தை இறக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இதுதொடர்பாக கோபிநாத் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கொரட்டூர் காவல் ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீஸார் உடனடியாக விசாரணையில் ஈடுபட்டனர். கோபிநாத்தை ஆட்டோவில் ஏற்றிய இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் மற்றும் ஆட்டோ எண் பதிவாகி இருந்தது. அதை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், திருநின்றவூரைச் சேர்ந்த மகேஷ், விஜய் ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செயின், மோதிரத்தை பறிமுதல் செய்தனர்.
இருவரும் சென்னையில் பல்வேறு இடங்களில் முதியவர்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. திறமையாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை 10 மணி நேரத்தில் கைது செய்த கொரட்டூர் காவல்ஆய்வாளர் மோகன், உதவி ஆய்வாளர் காந்தி, தலைமைக் காவலர் வாசுதேவன், முதல்நிலைக் காவலர் சீதாராமன் ஆகியோரை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
