LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, November 21, 2018

மத்திய அரசிடமிருந்து இடைக்கால நிவாரண நிதி கோராதது ஏன்? தினகரன் கேள்வியும் முதல்வரின் பயணமும்

மிகப்பெரிய இயற்கை பேரிடர் நடந்துள்ள நிலையில், மத்திய அரசிடமிருந்து இடைக்கால நிவாரண நிதி கோராதது ஏன்?  என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கஜா புயலின் கோரதாண்டவத்தால் நிலைகுலைந்து போயுள்ள டெல்டா மாவட்டங்களில், ஆறு நாட்களாகியும் மக்கள்  உணவின்றி, குடி நீரின்றி, மாற்று துணியின்றி தத்தளித்து கொண்டிருக்கின்றனர்

கடந்த இரண்டு நாட்களாக, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றிருந்தபோது, பல கிராமங்களில் கிராம நிர்வாக அதிகாரி கூட தங்களைக் காண வரவில்லை என்று மக்கள் கதறுகின்றனர்.

இந்நிலையில், ஐந்து நாட்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட ஹெலிகாப்டரில் பறந்து வந்த முதல்வர், வானிலையைக் காரணம் காட்டி திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்லாமலேயே திரும்பியுள்ளார். புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களிலும் போலிஸ் பாதுகாப்புடன் சில பயனாளிகளுக்கு மட்டும் நிவாரண உதவி வழங்கிவிட்டு பறந்துவிட்டார்.

தற்போது, முதல்வர் பிரதமரை நாளை சந்தித்து புயல் நிவாரண நிதி கோர இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. நூற்றுக்கணக்கான கிராமங்களில், பாதிக்கப்பட்ட மக்களையும் சேதமடைந்த அவர்களது நிலங்களையும், வீடுகளையும், கால்நடைகளையும் உடைமைகளையும் ஒரு கிராம நிர்வாக அதிகாரி கூட வந்து பார்வையிட்டு இழப்புகளை மதிப்பீடு செய்யாத நிலையில், எதன் அடிப்படையில் முதல்வர் நிவாரண நிதியை கோர இருக்கிறார்? மிகப் பெரிய இயற்கை பேரிடர் நடந்துள்ள நிலையில், மத்திய அரசிடமிருந்து இடைக்கால நிவாரண நிதி கோராதது ஏன்?

பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறியாமல், இழப்புகளை மதிப்பீடு செய்யாமல், அவசர அவசரமாக முதல்வர் டெல்லி செல்வது உண்மையிலேயே நிவாரண நிதி கோருவதற்கா அல்லது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காகவா என்ற நியாயமான சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது'' என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆனால் கஜா புயல் பாதிப்பு அறிக்கையையும் சமர்பிக்கவும், மத்திய அரசின் நிவாரண நிதியை கோரவும் முதலமைச்சர் பழனிசாமி 22ஆம் தேதி டெல்லி செல்கிறார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன் விபரம் வருமாறு

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. புயல் ஓய்ந்தாலும் மக்களின் இன்னல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சூறைக்காற்றில் மேற்கூரைகள் பறந்த நிலையில், வீட்டிலிருக்கும் அனைத்து பொருள்களும் மழையால் சேதமடைந்தன. புயல் ஏற்படுத்திய சேதங்கள் மிக அதிகமென்றாலும், மாணவர்களுக்கு கல்வி பாதிக்கும் நிலையையும் ஏற்படுத்திச் சென்றது. பல ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மின்சாரம் இன்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்கள் சீரமைக்கப்படும் வரை, மின்கம்பிகளே துணிகளை உலர்த்தும் கொடிகளாக மாறியிருக்கின்றன.

கன மழை புகுந்த வீட்டில், உணவுக்கு உதவும் குடும்ப அட்டைகள் கூட தப்பவில்லை. குடும்ப அட்டை போன்ற முக்கிய ஆவணங்களையும் உலர்த்தும் காட்சி, கன மழையின் தீவிரத்தை உணர்த்துவதாக இருந்தது. அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதிலும் தட்டுப்பாடுகள் இருந்தன. பல பெட்ரோல் நிலையங்களும் சேதமடைந்திருந்ததால், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திறந்திருக்கும் ஓரிரு பெட்ரோல் நிலையங்களிலும் பெட்ரோல், டீசலுக்காக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இணைய சேவை துண்டிப்பு, மின்சாரம் துண்டிப்பு போன்ற காரணங்களால் ஏடிஎம் மையங்களும் மூடப்பட்டிருந்ததால், பணமெடுப்பதிலும் சிரமம் இருந்தது உணவு, உடை, இருப்பிடம் என மக்களின் அத்தியாவசியத் தேவைகளை இந்த கஜா புயல் புரட்டிப்போட்டிருக்கிறது. திருவாரூரில் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காதசூழல் நிலவுகிறது. குடிநீருக்கான ஏற்பாட்டையாவது உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்பது தான் அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.

இந்நிலையில் மத்திய அரசிடம் நிவாரண நிதி கோர முதலமைச்சர் பழனிசாமி வரும் 22ஆம் தேதி டெல்லி செல்லவுள்ளார். கஜா புயலின் சேதம் குறித்து பிரதமரிடம் அவர் எடுத்துரைக்கவுள்ளார். அத்துடன் கஜா புயல் குறித்து மேற்கொண்ட ஆய்வறிக்கைகையும் பிரதமரிடம் கொடுத்து, நிவாரண நிதியை அவர் கோர இருக்கிறார் என்று தமிழ் நாட்டு அரசு அறிவித்துள்ளது



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7