
எனினும் நகரசபைக்குச் சொந்தமான காணியை மின்சாரசபைக்குக் கொடுப்பதற்குத் தான் விரும்பவில்லை என்றும் தனது எதிர்ப்பைப் பதிவுசெய்யுமாறும் உறுப்பினர் ஒருவர் அழுத்தமாகக் கூறியிருக்கிறார். அந்த எதிர்ப்பு சபைக்கூட்டறிக்கையிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தலைவர் உட்பட நகரசபையின் மொத்த உறுப்பினர்கள் 24பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை மின்சாரசபையின் பிரதான அலுவலகம் லவ்லேன் என்ற இடத்தில் இயங்கி வருகிறது. அதன் கிளைக் காரியாலயமொன்று கஸ்கிசன் வீதியிலுள்ள தனியார் வீடொன்றில் வாடகைக்கு இயங்கிவருகிறது. இக்கிளைக் காரியாலயத்துக்குச் சொந்தமாகக் கட்டடம் ஒன்றைக் கட்டிக்கொள்வதற்காகவே மின்சாரநிலையவீதிக் காணியைக் கேட்டுள்ளனர். அதற்கு மின்சாரசபையாரால் தெரிவிக்கப்பட்ட காரணம்,நகரப்பகுதியில் சொந்தமான அலுவலகம் இருந்தால் பராமரிப்பு வேலைகள் இலகுவாகவும் துரிதமாகவும் இடம்பெறும் என்பதாகும். இதனை நகராட்சிமன்றத் தலைவரும் உபதலைவரும் சபைமுன் வைத்து அனுமதி கோரியிருக்கிறார்கள்.
மின்சாரச்சபையின் மாவட்டத் தலைமைக் காரியாலயம் தற்போது இயங்கிவருகின்ற காணியும் நகரசபைக்குச் சொந்தமானதே. இந்தநிலையில் மின்சாரசபைக்கு நகரஎல்லைக்குள் இரண்டாவது காணியைக் கொடுப்பதில் தலைவரும் உபதலைவரும் ஏன் அதிககரிசனை காட்டுகிறார்கள் என்பதுதான் எதிர்ப்பாளர்களின் கேள்வி. மின்சாரசபைக்குக் காணிகொடுக்கப்படா விட்டால் நகரசபை தெருவிளக்குகள் போடுவதில் பலசிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்றும் அவ்வாறு நேராமல் இருப்பதற்கு காணியை வழங்கவதுதான் சிறந்த பரிகாரம் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.
இத்தனைக்கும் கொடுக்கப்படவிருக்கும் காணியில விடுதிகள் அமைந்திருக்கின்றன. இது ஒருபுறமிருக்க, நகராட்சிமன்றத்தின் வேலைப்பிரிவு எதிர்காலத்தில் தன் ஆற்றலைப் பெருக்கும்போது இக்காணியையும் பயன்படுத்த வேண்டியிருக்கும். இந்த நிலையில் வரியிறுப்பாளர்களின் எதிர்கால நலத்தைக் கருத்திற்கொள்ளாது காணியை மின்சாரசபைக்கு வழங்குவதில் தலைவரும உபதலைவரும் ஏன் அவசரப்படுகிறார்கள் என்பது யாருக்கும் புரியவில்லை.
சபையில் இந்தவிடயம் முழுமையாக விவாதிக்கப்பட வேண்டுமென்றும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் ஒன்பது உறுப்பினர்கள் கையெழுத்திட்டுத் தலைவரிடம் கோரிக்கையொன்றை 5.10.2018 அன்று கையளித்தனர். தலைவர் இக்கடிதத்தைக் கிடப்பில் போட்டுவிடவே, பத்து உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் மீண்டும் ஒரு கடிதம் 11.10.2018இல் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் தலைவர் அசையாதிருக்கவே இவ்விடயம் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அவர்களின் கவனத்துக்கு 15.10.2018 அன்று கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
உதவி ஆணையாளர் உடனடி நடவடிக்கை எடுத்ததன் பேரில் வழமையான மாதாந்தக்கூட்டம் 23ஆந் திகதி நடைபெறுமென்றும் அதில் இப்பிரச்சினை விவாதிக்கப்படுமென்றும் தலைவரால் உள்ளுராட்சி உதவி ஆணையாளரிடம் தெரிவிக்கப்பட்டது. எனினும் 23ஆந் திகதி கூடிய சபையில் நேரம்போதாதமை என்ற காரணத்தைக் காட்டி நவம்பர் 9ஆந் திகதிக்கு விடயம் ஒத்தி வைக்கப்பட்டது.
நவம்பர் 9ஆந் திகதி; இடம்பெற்ற கூட்டத்தில் இவ்விடயம் காரசாரமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. எட்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள காணியின்; கைமாற்றம் தொடர்பாக அவ்வட்டார உறுப்பினர் கௌரிமுகுந்தனுடனோ,அவ்வட்டாரத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டுள்ள வேறு இரண்டு உறுப்பினர்களான சிவகுமார், ஜஸ்டின் ஆகியோர்களுடனோ ஏன் கலந்துரையாடப் படவில்லை என்ற கேள்விக்குத் தலைவரிடம் பதிலேதும் இல்லாமற் போய்விட்டது. இதுவரை நகராட்சிமன்றத்தால் அரசதிணைக்களங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட காணிகளில் எதனையாவது ஒப்பந்தகாலம் முடிந்ததும் மீளப் பெறப்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கும் நகரசபைத் தலைவரிடம் பதிலில்லை.
மின்சாரநிலையவீதிக் காணியை மின்சாரசபை கேட்டுக் கொண்டதன்படி கொடுக்காமல் விட்டால் தெருவிளக்குகள் போடுவதில் பிரச்சினைகள் தோன்றலாம் என்பது உண்மையானால், மின்சாரசபை நகரசபையைப் பயமுறுத்திப் பணியவைக்க முயல்கிறது என்று கருதலாமா என்ற கேள்விக்கும் தலைவரிடம் பதில் இருக்கவில்லை. நகரமக்களுக்குச் சொந்தமான சொத்துகளைப் பணம்வருகின்றது என்பதற்காக மத்தியஅரச நிறுவனங்களிடம் கையளிப்பது இந்த மண்ணுக்குச் செய்கிற துரோகம் இல்லையா என்ற கேள்விக்கும் தலைவர் பதில்கூறவில்லை.
.
நவம்பர் 9ஆந் திகதி இடம்பெற்ற விசேட சபையமர்வில் காணிதொடர்பாகச் சூடாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருக்கின்றன. காணி கோரி மின்சாரசபை எவ்வாறு தொடர்பு கொண்டார்கள் என்று உறுப்பினர்களால் கேட்கப்பட்டபோது, மின்சாரசபையால் காணிகோரப்பட்ட கடிதம் உறுப்பினர்களின் பார்வைக்காக விடப்பட்டது. அக்கடிதம் 18.10.2018இல் எழுதப்பட்டிருந்தமை கண்டு உறுப்பினர்கள் ஆச்சரியமடைந்தனர். ஒக்டோபர்18இல் எழுதப்பட்ட கடிதம் தொடர்பாக இருபத்தெட்டு நாட்களுக்கு முன்னதாக அதாவது செப்டெம்பர் 21இல் நகரசபை தீர்மானம் போட்டதெப்படி என்ற கேள்வியும் சபையில் எழுந்தது.
எவ்வாறெனினும் தலைவரும் உபதலைவரும் மின்சாரசபைக்குக் காணி வழங்கியே தீரவேண்டும் என்பதில் பிடிவாதமாக நிற்கிறார்கள். தற்போதைய நிலையில் தலைவர்உட்பட ஏழு உறுப்பினர்கள் தவிர்ந்த அனைவருமே மின்சாரசபைக்குக் குறிப்பிட்ட காணி வழங்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதுபற்றிய முன்மொழிவு சபையில் எடுக்கப்பட்டபோது, அதனை வாக்கெடுப்புக்கு விடத் தலைவர் மறுத்துவிட்டார். அடுத்ததடவை மேலும் விளக்கங்களுடன் காணிதொடர்பாகப் பேசலாம் எனத் தலைவர் கூட்டத்தை நிறைவு செய்திருக்கிறார்.
தலைவரும் உபதலைவரும் இவ்விடயத்தில் பிடிவாதமாக நடந்துகொண்டால் எமது நியாயங்களை மக்கள்முன் வைத்து அதனை மக்கள்போராட்டமாக மாற்றுவோம் என்கிறார்கள் எதிர்நிலையாளர்கள். முடிவு எப்படியாகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
.கந்தவனம் கோணேஸ்வரன்
