
சரியானது அல்லது பிழையானது என்றோ, ஜனநாயகமானது அல்லது ஜனநாயக விரோதமானது என விமர்சித்துக்கொண்டிருக்கிறோம். அதைச் சற்று நிறுத்திவிட்டு இந்த அரசியல் விளையாட்டை உற்றுக் கவனித்தால் இன்னுமொரு முக்கியமான விசயம் மேலெழுந்து வரும். அது மைத்திரி ஒரு வினோதமான அரசியல் சாகச வீரன் என்பதுதான் அது.
இவருடைய ஆட்டம் திட்டமிட்டது போல் தோற்றமளிக்கவில்லை. ஒருவேளை இப்படி ஊகிப்பதும் சரியாக இருக்கலாம். ஆயினும், மைதானத்தில் ஏற்படும் முன்னெடுப்பக்களை எதிர்கொள்வதில் மிகவும் திறமையான ஒரு அரசியல் வீரன்தான். இதற்கு அவரிடமிருக்கும் நிறைவேற்று அதிகாரம் காரணமாக அமைந்திருந்தாலும், அந்த குறைக்கப்பட்ட அதிகாரத்தை வைத்துக்கொண்டு அரசியல் விளையாட்டை மிகப் புதுமையாக களத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார்.
மிகப் பலம்பொருந்தியதும், அச்சம் தரக்கூடியவருமான மஹிந்தவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியதே அவருடைய முதலாவது சாகசச் செயற்பாடு என்றுதான் கூற வேண்டும். தனக்கு எதிராக போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு என்ன நடந்தது என்பதை நன்கே அறிந்த நிலையில்தான் களமிறங்கினார். அதற்கு ஆதரவாக பலகட்சிகளை இயங்கவைத்தார். அன்றைய நிலையில் இது மிக ஆபத்தானது என பேசப்பட்டது.
ரணில் தலைமையிலான கூட்டமைப்போடு முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தாலும், அவை அதிகாரப்போட்டியோடு தொடர்புடையது என்பதை மிக எளிதாக கணித்துவிட முடியும். மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதை மையப்படுத்திய ஒரு அரசியல் முரண்பாட்டையே உருவாக்கினார். எனினும், ரணிலின் தலைமையை விரும்பவில்லை என ஒரு கருத்தை முன்வைப்பதினுாடாக, தன்னை ஜனாதிபதியாக ஆக்கிய யூஎன்பி தலைமையிலான முகாமிற்கு எதிரானவரல்ல என்ற தோற்றப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடித்ததினுாடாக ஒரு நட்புறவையும், இன்னும் பேசுவதற்கான வாப்பையும் பேணியபடிதான் மைத்திரி இருந்தார்.
அதே நேரம் மஹிந்த தரப்பினரோடும் ஒரு துண்டித்துப்போகாத நட்பை வலுப்படுத்தும் நடைமுறைகளை கடந்த 3 வருடங்களாக உருவாக்கி அதிலும் வெற்றி கண்டிருந்தார். முற்றிலும் எதிரானதும் ஆனால் பலம்பொருந்தியதுமான இரண்டு அணிகளுடனும் இணைந்து செயல்படக்கூடிய ஒரு உத்தியை ஏககாலத்தில் பெற்றிருந்தார். இதுதான் அவரின் இரண்டாவது சாகசம்
ஆக, இந்த எதிரெதிரான மற்றும் பலம் பொருந்திய இரண்டு அணிகளையும் வைத்து ஒரு வினோமான விளையாட்டை ஆடத்தொடங்கினார். இரண்டு அணிகளுக்கும் தான் தேவை என்ற ஒரு நிலவரத்தை உருவாக்குவதே அந்த தந்திரோபாயம். ஏன் இரண்டு அணிகளுக்கும் தேவையானவராக தன்னை உறுதிப்படுத்தும் அவசியம் மைத்திரிக்கு வந்தது? ஏனெனில் மைத்திரிக்கென்று தனியான ஒரு பலம் இல்லவே இல்லை. எனவே இந்த இரண்டு அணிகளில் ஏதாவதொன்றைத்தான் பயன்படுத்த வேண்டும். அது தவிர வேறு வழியில்லை.
இரண்டு அணிகளையும் களத்தில் இறக்கி சிக்கல்களை உருவாக்க வேண்டும். ஆயினும் இரண்டு அணிகளும் கடைசிவரை தனது உதவியை நம்பியே இருக்கவும் வேண்டும். இதற்கான காய்களை மெதுவாக நகர்த்தத் தொடங்கினார். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் மஹிந்த அணி தமது ஆதரவுத் தளத்தை பலப்படுத்தியிருந்தது. அந்த பலம் கொஞ்சம் அதிகமானதுதான். ரணில் தலைமையிலான அணிக்கோ அல்லது மஹிந்த தலைமையிலான அணிக்கோ தனிப்பட்ட பலமானதும், பெரியளவிலானதுமான ஆதரவுத்தளம் எப்போதும் உருவாகிவிடக்கூடாது என்பதே இந்த சூத்திரத்தின் சமன்பாடு, இரண்டு தரப்பினருக்கும் பலமான மக்கள் ஆதரவு உருவாகாமல் தடுப்பதும், அதனுாடாக தனது ஆதரவை இரண்டில் ஒரு அணியினருக்கு வழங்குவதினுாடாக தனது அரசியல் அதிகாரத்தை நீடிப்பது என்பதே திட்டம்.
இதே நேரம் மஹிந்த அணியினருக்கு தென்னிலங்கையில் பலம் அதிகரித்திருப்பது தெரிந்த விசயம்தான் எனவே, மஹிந்த அணியினரின் மக்கள் செல்வாக்கை குறைக்க வேண்டிய தேவை மைத்திரிக்கு இருக்கிறது. அந்த முயற்சியை நடைமுறைப்படுத்துவதற்கே மஹிந்தவை மைதானத்திற்குள் கொண்டு வந்தார். மஹிந்த குடும்பத்தார்களின் பைல்கள் துாசிதட்டப்பட்டு விரைவாக மேலே எடுக்கப்பட்டது. இதன் ஆபத்தை மனக்கசப்போடு எதிர்நோக்கியிருந்த மஹிந்தவுக்கு, மைத்திரியின் அழைப்பு ஒரு தற்காலிக நிம்மதியாக இருந்தது. இதே நேரம், ஆட்சியைக் கைப்பற்றவும் முடியும் என்ற நம்பிக்கைகளும் ஊட்டப்பட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தன்னோடு இருப்பதாக உறுதியானதும் மஹிந்த தரப்பு களத்தில் மடித்துக்கட்டிக்கொண்டு இறங்கிவிட்டது.
மஹிந்த தரப்பினரின் கணக்கு வேறுவிதமானது. மைத்திரியை வைத்து ஆட்சியை பிடிப்பது. அதனுாடாக மீண்டும் பைல்களை குப்பைக்கூடையின் பக்கம் வீசி எறிந்துவிடுவது. தேர்தல் ஒன்று வரும்போது மைத்திரியை கழட்டிவிடுவது. இதை மைத்திரியும் அறியாதவரல்ல. எனவே, நமக்கு எந்தளவு மஹிந்தவின் கூட்டு உதவியாக இருக்கும் என்பதை பரிசோதித்துப் பார்க்க விரும்பினார். மஹிந்த பிரதமரானதும், சகாக்கள் அமைச்சராக ஆனதும், ஆட்டம் களைகட்டியது. இதோ நாட்டை கைப்பற்றிவிட்டோம் என்று நினைத்துக்கொண்டார்கள்.
உடனடியாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார். அது யாப்புக்கு முரணானது என்று தெரிந்தும் கூட. பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்து தேர்தலையும் அறிவித்ததும், மஹிந்த தரப்பினரின் மூளைகளுக்குள் துாங்கிக்கொண்டிருந்த தந்திரோபாயங்கள் வெளிப்படத் தொடங்கின. மைத்திரிக்கு ஆதரவானவர்களையும் வாங்கி மைத்திரியை நடு ரோட்டில் விடும் அவர்களின் திட்டத்திற்கான முதலாவது நகர்வுகள் ஆரம்பித்தன. மைத்திரி ஊகித்தது நிஜமானது.
ரணில் தலைமையிலான அணியினர் நீதிமன்றத்திற்கு சென்றனர். வழக்கு தடை உத்தரவோடு ஒத்திப்போடப்பட்டது. ஜனநாயகத்திற்கு விரோதமாக நான் செயற்படமாட்டேன். நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வேன் என்ற தோரணையில், பாராளுமன்றத்தை கூட்டுவதை தடைசெய்யாது விட்டுவிட்டார் மைத்திரி.
இப்போதுதான் ஆட்டத்தின் உச்சக்கட்டம். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் காட்டுங்கள் என யுஎன்பிக்கும், அதை காட்டவிடாமல் குழப்புவதற்கு மஹிந்த அணிக்குமான ஒரு நிலையை உருவாக்கியிருக்கிறார்.
நீதிமன்றத் தீர்ப்புக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. இரண்டு முறை பாராளுமன்றம் குழப்பத்தில் கலைந்தது. அதன் பிறகு ஜனாதிபதியை யுஎன்பி தலைமையிலான அணி சந்தித்ததும் – வாக்கெடுப்பை பாராளுமன்றத்தில் நடாத்துவதற்கு வழிவிடுவதாக மைத்திரி கூறினார். அதோடு இரண்டு நிபந்தனைகளை முன்வைத்தார். 1. ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியதும், பாராளுமன்றத்தை கலைத்ததும் சட்டவிரோதமானது எனற பகுதியை நீக்கிவிட்டு வாக்கெடுப்பை நடத்துங்கள் என்பதுதான் அது.
அதன் பிறகு பாராளுமன்றம் கூடியபோது கூட குழப்பத்திலேயே முடிவடைந்திருக்கிறது. இன்னும் மஹிந்த மற்றும் ரணில் தலைமையிலான இரண்டு அணியினருக்கும் மைத்திரியின் உதவியே தேவை என்ற நிலையை மிகப்பலமாக நிறுவியிருக்கிறார். மைத்திரி இரண்டில் ஏதாவதொரு அணிக்கு ஆதரவு செய்வதாக இருந்தால், ஒரு முக்கியமான நிபந்தனையை முன்வைக்க கூடும். அந்த நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டால் மாத்திரமே, அடுத்த நடவடிக்கைக்கு மைத்திரி அடியெடுத்துவைப்பார் என்று ஊகிக்கலாம்.
இருந்தாலும், இந்த அரசியல் விளையாட்டில் ரணில் தலைமையிலான முகாமினருக்கு சர்வதேச மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் பெரும் ஆதரவு உருவாகியிருக்கிறது என்பதே உண்மை. மஹிந்த தலைமையிலான அணியினர் சும்மா இருந்திருந்தாலே இன்னும் இருவருடங்களில் ரணிலை வீட்டுக்கு அனுப்பியிருப்பார்கள். ஆனால், அது தலைகீழாக மாறியிருக்கிறது. மற்றப்படி மஹிந்த தரப்பிற்கு சர்வதேச அளவில் படுமோசமான நிலை உருவாகியிருக்கிறது. நாட்டை கொண்டு நடத்த இந்த சர்வதேச ஆதரவு மிக முக்கியம். அதே நேரம் தேசிய அளவில்கூட மஹிந்த அணியினர் பின்னடைவை சந்தித்திருக்கின்றனர். சுதந்திரக் கட்சி அழிந்தேபோய்விட்டது என கூறலாம். தேர்தல் வந்தாலும் யுஎன்பி பெரும் ஆதரவை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையே தற்போது உள்ளது.
ஒரு வேளை இது தன்னை ஜனாதிபதியாக மாற்றிய யு.என்.பி க்கு செய்யும் நன்றிக்கடனாககூட இருக்கலாம். மஹிந்த அணியினரின் அரசியல் எதிர்காலத்திற்கு சாவு மணி அடித்திருக்கிறார் என்றே கூற வேண்டும். நாடு யுஎன்பியை அனுதாபத்தோடு பார்க்கிறது. மைதானம் மிகவும் சாதகமாக இருக்கிறது. இன்னும் தமது ஆதரவுத்தளத்தை அதிகரிப்பதற்கும் தம்மீது அனுதாபத்தை பெருக்கவும் யூஎன்பி களத்தில் குதித்திருக்கிறது. தேர்தல் வந்தாலும், வராதுபோனாலும் யூஎன்பிக்கே வாய்ப்புகள் அதிகமாகியிருக்கிறது.
தனது அரசியல் அதிகாரத்தை இன்னும் நீட்டிக்கொள்வதற்கு மைத்திரி ஆடிய இந்த அரசியல் விளையாட்டு வினோதமானது. சாகசங்கள் நிறைந்தது என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் இல்லை. மைத்திரியின் இந்த ஆட்டத்தை எப்படி இருக்கப்போகிறது என யாரும் ஊகிக்க இயலாது. அதுவே அவரின் வெற்றி என்றும் கூறலாம். இந்த அரசியல் ஆட்டத்திற்கு விதிகள் ஏதுமில்லை. பாதைகளும் ஏதுமில்லை. ஹிட்லரின் ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது. ” நடந்து செல்ல பாதைகளில்லை என யோசிக்காதே, நீ நடந்தால் அதுகூட ஒரு பாதைதான்” மைத்திரி அதையே பின்பற்றுகிறார்.
மைத்திரியின் இந்த ஆட்டத்திற்கு எந்த விதிகளுமில்லை. அவர் ஆடுவதே விதி.
இந்த கட்டுரையில் நான் ஜனநாயகத்தின் நிலவரம் குறித்து எதையும் கவனத்திற்கொள்ளவில்லை.
றியாஸ் குரானா
