துளித்துளியாய் ரசித்து
கடலைப் பருகி முடிக்குமளவும்
ஒரு சிறுநடை போட்டு வரலாம் வா
முத்தத்தின் இசையை
வண்ணங்களாக மாற்றியபடி
பட்டாம்பூச்சிகளாகத் திரியும்
பரவசங்களை அருகழைப்போம் வா
கண்களில் வழியும்
பேரன்பை அன்னமென
குழையப் பிசைந்து
ஊட்ட ஊட்ட
உள்ளத்தில் நிறையும்
வெண்ணிலாக்களை எண்ணலாம் வா
எரிமலையின் வேகமும்
பனிமலையின் தண்மையும்
உன் அணைப்பு
இங்கு ஏதும் ஆபத்து நேரிடலாம்
அண்டவெளி செல்வோம் வா
சிறுசிறு சண்டைகள்
நம் குழந்தைகள்
எந்தக் குழந்தை எப்போது
உரத்தழைக்குமோ தெரியாது
அதற்குள் யுககாலம்
வாழ்ந்திடலாம் வா
வயதேற வயதேறக் கனியும்
இக்காதலின் விதைகள் சிறகுபெற்றவை
குறும்பு கண்சிமிட்டலால்
அவற்றை விண்ணிலேற்றி
தலைமுறைகளை விருத்திப்போம் வா
பிடிவாதமும் கோபமும்
சாத்தானின் மந்திரக்கோல்
அதனை உன் அக்கறைக்குள்
வைத்து பத்திரமாய் தாழிட்டு
தேவனின் புன்னகையில்
இரத்தினக்கம்பளம் விரித்தபடி வா
அடுக்கப்பட்டிருக்கும் அலுவலக்கோப்புகள்
வழிவிட்டு நகர மறுக்கும்
சண்டி எருமைகளின் கூட்டம்
ஐயோ பாவம்
என் வசவுகள் கோலாக
உனக்கு உதவக்கூடும்
அலைபேசியைத் திறந்துபார்
அடுக்கி இருக்கிறது
ஒன்றையேனும் உருவியெடுத்து
ரோசத்தைக் காட்டியபடி வா
என்னடி அவசரம்
சிடுசிடுப்பைத் தூக்கிப் போடு
மறந்து தொலைத்திருப்பாய்
மறுபடி சொல்கிறேன்
துளித்துளியாய் ரசித்து
கடலைப் பருகி முடிக்குமளவும்
ஒரு சிறுநடை போய் வரலாம் வா
தவ.திரவிய. ஹேமலதா
