கென்யாவில் இடம்பெறும் நிலைபேறான
நீரியல்வள அபிவிருத்தி மாநாட்டில் கலந்து
கொள்வதற்காக இலங்கை சார்பில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் விஜயம்..
.
மட்டக்களப்பு, மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் கென்யா, நைறோபி நகரில் இடம்பெறும் நிலைபேறான நீரியல் வள அபிவிருத்தி
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் சார்பாக கென்யாவிற்கான விஜயமொன்றினை
மேற்கொண்டுள்ளார்.
நவீன உலகமயமாக்கலின் கரணமாக நாடுகள்
எதிர்நோக்கும் சூழலியல் பிரச்சனைகள் தொடர்பாகவும் அதன் ஊடாக வாவிகள் மற்றும் கடல்
சார்ந்த நீர்நிலைகள் மாசடைவது தொடர்பாகவும் இங்கு ஆராயப்படவுள்ளது.
நீர்நிலைகள் மாசடைவதைத் தடுப்பதற்கான
வழிவகைகள் என்ன? எதிர்காலத்தில் இவ்வாறு மாசடையும்
நிலையிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பது பற்றிய திட்டங்களும் இங்கு
முன்வைக்கப்படவுள்ளன. அதுமட்டுமன்றி நீர்
நிலைகளை அண்டிய பிரதேச மக்களின் வாழ்வாதார, தொழில் விருத்திக்கான வழிவகைகள், சுற்றுலாத்துறை விருத்தி மற்றும் அதனூடான அபிவிருத்தி
முன்னெடுப்புகள் என்பன பற்றியும் ஆராயப்படவுள்ளன.
184 நாடுகளில் இருந்து துறைசார்
அறிவியலாளர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள், அரச தலைவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என
4000 பங்குபற்றுநர்கள் வரை கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கையின் சார்பாக கிழக்கு மாகாண
ஆளுநர் மற்றும் மட்டக்களப்ப மாநகர முதல்வர் ஆகியோருக்கு அழைப்பு
விடுக்கப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்ப
மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் இவ் விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். மட்டக்களப்பு
மாநகர சபையின் சார்பில் திட்டமிடப்பட்டுள்ள நகர அழகுபடுத்தல், வாவிகளின் தூய்மை பேணல், மக்களின் வாழ்வாதார
அபிவிருத்தி திட்டங்களை மேம்படுத்துவதற்காக முதலீட்டாளர்களை உள்வாங்குதல் போன்ற பல்வேறு முன்மொழிவுகளையும், திட்ட வரைபுகளையும் பற்றி 20 நிமிடங்கள் உரையாற்றவுள்ளார்.
இம்மாநாடானது இம்மாதம் 26 ஆம் திகதி
தொடக்கம் 28 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. கெண்யா அரசுடன் இணைந்து கனடா அரசு
குறித்த மாநாட்டினை நைறோபி நகரில் ஒருங்கிணைப்பு செய்துள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.
