ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ள பிரதமர் மோடி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை நியாயப்படுத்தி உள்ளார். சத்தீஸ்காரின் பிலாஸ்பூரில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், இது தொடர்பாக கூறியதாவது
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை குறைகூறுவது முட்டாள்தனமானது. ஏனெனில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் நாட்டில் இருந்த போலி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு உள் ளன. அதன் விளைவாகத்தான் காங்கிரஸ் தலைவர்களான சோனியாவும், ராகுல் காந்தியும் ஜாமீன் கேட்கும் நிலை ஏற்பட்டது.
நாட்டின் வளர்ச்சிக்காகவே பா.ஜனதா பாடுபட்டு வருகிறது. இதனால் பா.ஜனதாவுடன் எப்படி போட்டியிடுவது? எனத்தெரியாமல் எதிர்க்கட்சிகள் குழம்பி இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியில் அரசியல் தொடக்கமும், முடிவும் ஒரே குடும்பம்தான். ஆனால் எங்கள் அரசியலோ ஏழைகளின் குடிசையில் தொடங்குகிறது.
வாழ்வோ, சாவோ நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் ஒரு தலைமையை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பெறவில்லை. அந்தவகையில் சத்தீஸ்காரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால், தற்போதைய வளர்ச்சியை மாநிலம் அடைவதற்கு 50 ஆண்டுகள் தேவைப்பட்டு இருக்கும்.
ஏழைகளுக்கான வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் ஒவ்வொரு ரூபாயிலும், வெறும் 15 பைசா மட்டுமே அவர்களை சென்றடைவதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி எவ்வளவு உண்மையுடன் கூறியிருக்கிறார்? அந்த மீதமுள்ள 85 பைசாவை உறிஞ்சுவது ‘கை’தான் (காங்கிரஸ் கட்சியின் சின்னம்).
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
