
இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) இந்த விசேட தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக தான் தொடர்ந்தும் முன்னிற்பதாகவும், எப்பொழுதும் தான் அரசியலமைப்புக்கு அமையவே செயற்படுவதாகவும் ஜனாதிபதி, பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளருக்கு விளக்கமளித்துள்ளார்.
நாடாளுமன்ற நிலையியல் கட்டளை மற்றும் மரபுகளுக்கு அமைய செயற்படுமாறு தாம் சபாநாயகரிடம் மிகவும் தெளிவாக கூறியிருந்ததாகவும் ஜனாதிபதி இந்த தொலைபேசி உரையாடலின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல்களுக்கு அல்லாமல் இலத்திரனியல் வக்கெடுப்பு அல்லது பெயர் கூப்பிட்டு வக்கெடுப்பு போன்றவற்றை செயற்படுத்துமாறு தான் சபாநாயகரிடம் கோரியதாக ஜனாதிபதி இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் நீண்டகாலமாக உறுப்புரிமை கொண்டுள்ளதுடன், ஆசியாவில் பழமையான ஜனநாயக நாடாகவும், இலங்கை ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டுள்ளமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் தொலைபேசி உரையாடலில் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் அமைப்பு இலங்கையுடன் எதிர்காலத்திலும் தொடர்ந்து மிகவும் நெருக்கமாக மற்றும் ஒத்துழைப்புடன் செயற்படவுள்ளதாக பொதுச் செயலாளர் இதன்போது ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
