
நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கபீர் ஹாசிம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் செய்த தவறை மறைக்கவும் அதனை நியாயப்படுத்தவும் பல தவறுகளை தொடர்ந்தும் செய்துவருகின்றார்.
சோபித்த தேரரின் பூதவுடலுக்கு முன்னால் இருந்து, நிறைவேற்று ஜனாபதி முறைமையை இல்லாதொழிப்பேன் என தெரிவித்த ஜனாதிபதி இன்று அரசியலமைப்பில் அவருக்கு இல்லாத அதிகாரத்தையும் தனக்கு இருப்பதாக தெரிவித்து நாடாளுமன்றத்தையும் கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதேபோன்று சோபித்த தேரரின் நினைவு தினத்தில் அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் தனக்கு தெரியாது என தெரிவித்திருந்தார். ஆனால் 100 நாள் வேலைத்திட்டத்தில் நாங்கள் பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டோம்.
ஆனால் நாட்டின் வளங்களை விற்பனை செய்வதாக எங்கள் மீது குற்றம்சாட்டி மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளார்.
இதனால் நாடு அராஜக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாங்கள் ஆரம்பித்த வேலைத்திட்டங்களான கிராம எழுச்சி, இன்டபிரைஸ் சிறிலங்கா, வீட்டுத்திட்டம், பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்பு போன்ற வேலைத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்களே பாதிக்கப்படுகின்றனர்“ என தெரிவித்துள்ளார்.
