அயல் வீட்டுச் சிறுமியின்
தெவிட்டா இனிப்பு மீந்த மொழி
பிறவியிலிருந்து அறுந்திருக்கிறது
அவளுக்குள் இடையுறா நிலவும் மௌனம்
அதீத அர்தங்களை பேசுகின்றன
குட்டி தேவதையென முகிழ்ந்திருக்கையில்
உள்ளத்தை சாந்தப்படுத்துகிறாள்
அவள் இடைக்கிடை உதிர்த்தும்
கள்ளங் கபடமற்ற புன்னகை
மஞ்சள் நிறப் பூக்களென
மனசெங்கும் விரவிக் கிடக்கிறது
விழிகள் மூடி மூடி திறக்கையில்
ஆயிரமாயிரம் பட்டாம் பூச்சிகள்
எனக்குள் சிறகடித்துப் பறக்கின்றன
இன்னும் வானவில்லின் நிறங்கள்
கண்களில் விரிந்து ஔி தகதகக்கிறது
அவளை கடந்து செல்லும் தருணமெல்லாம்
எனது குரலை பரிசளிக்க அவாவுகிறேன்
அது சாத்தியமற்றுப் போகையில்
சலிப்புற்றுடைந்து சிதறுகிறது மனம்
உடன் குயிலின் மொழியை
இரவலாக கேட்டுப் பார்க்கிறேன்
அது எனது மொழி புரியாமல்
அவ்விடத்திலிருந்து பறந்து செல்கிறது
முடிந்தளவு அன்பொழுகும் சொற்ளை
பகிர்ந்தழித்து வருகிறேன்
துவக்கத்திலிருந்து இசையில் லயித்து
மூழ்கியவளாக இருந்ததனால்
புல்லாங்குழலினை கொடுத்துள்ளேன்
இனி அவள் அதனை வாசித்து
என்னோடு உரையாடுவாள்
இருந்தும் கடவுள் கொடுக்கவிருக்கும்
கற்கண்டு மொழிக்காக காத்திருக்கிறாள்
ஜமீல்
