மகுடம் வெளியீடாக அண்மையில் வெளிவந்த கரவை மு தயாளனின் புளியமரம் சிறுகதை தொகுப்பிலுள்ள மறுவாசிப்பு சிறுகதை
பெரியாழ்வார் ஒரு நாள் தன் தோட்டத்துக்கு நீரூற்றிக் கொண்டிருக்கும் போது துளசிச் செடியின் கீழ் அழுது கொண்டே இருந்த குழந்தைதான் ஆண்டாள்.
அழகும் கம்பீரமும் நிறைந்த அந்தக் குழந்தையைக் கண்டதும் திகைத்துப்போன பெரியாழ்வார் செய்வதறியாது திகைத்து நின்றார்.
அவர் மனம் குழப்பமடைந்தது.
யாருக்கோ களவாகப் பிறந்த குழந்தை என்பது அவர் மனதிற்குத் தெரிந்தபோதும் தன் தகுதிக்கு மாசு கற்பிக்கும் குழந்தை என்று நினைத்து அதனை வெறுத்தார்.
அதே நேரம் அந்தக் குழந்தையை அப்படியே விட்டுச் செல்லவும் மனம்வரவில்லை.
அந்தக் குழந்தையும் அவரைப் பார்த்துப் புன்னகைத்தது.
வருவது வரட்டும் என்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்றார்.
குழந்தையை வளர்த்திவிட்டு இதை எப்படிச் சமாளிப்பது என்று யோசிக்கத் தொடங்கினார்.
பாவம் பெரியாழ்வார்.
அவருக்குள் ஒரு தீர்மானம் உருவானது. இரவு வரை பொறுத்திருந்து இரவானதும் கோயிலில் சனசந்தடி குறையக் குழந்தையைச் சேலையால் சுற்றி மறைத்துக் கோயிலுக்கு எடுத்துச் சென்றார்.
சுற்று முற்றும் பார்த்துவிட்டுக் கர்ப்பக்கிரகத்துக்கு முன்னால் குழந்தையை வைத்துவிட்டு கோயில் மணியைத் தன்னால் முடிந்த மட்டும் பலமாக அடித்தார்.
அந்த நேரத்தில் ஆலய மணி வேகமாக
அடிக்கப்படுவது கேட்டு கோயிலின் தர்ம கர்தாக்களில் சிலரும் வேறு சிலரும்
ஓடோடி வந்தனர்.
வந்தவர்கள் பெரியாழ்வாரையும் கர்ப்பக்கிரகத்துக்கு முன்னால் வளர்த்தப்பட்டிருக்கும் குழந்தையையும் பார்த்துத் திடுக்கிட்டுப் பெரியாழ்வாரை வினாக் குறியோடு பார்த்தனர்.
பெரியாழ்வாரும் தான் மனதில் திட்டமிட்டு
வைத்திருந்தபடி தான் கோயிலை மூடும் தருணம் குழந்தை அங்கு வளர்ததப் பட்டிருந்ததாகவும் குழந்தையின்மேல் எம்பெருமானின் மேலிருந்த பூ
விழுந்ததாகவும் உடனே உங்களை வரவழைக்கத் தானே மணியடித்ததாகவும் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைத்துச் சொல்லி முடித்தார்.
வந்தவர்களும் அவர் சொல்வதை நம்பி ஓம்
நாராயணாய நமஹ என்று தோத்திரம் சொல்லி அந்தக் குழந்தையை ஆண்டவன் உவந்தளித்த குழந்தையாக்கி ஆண்டவன் தந்ததால் ஆண்டாள் என்றும் பெயரிட்டு குழந்தையை அன்னையின் அவதாரமாக்கிச் சென்றனர். அதன் பின் குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் சென்ற பெரியாழ்வார் மனைவியிடம் கொடுத்துத் தம் பிள்ளையாக வளர்க்கத் தொடங்கினார்கள்.
இப்படித்தான் ஆண்டாளின் பிறப்புக்கதை இருக்கிறது.
இப்போ ஆண்டாள் வளர்ந்து பருவக் குமரியாகிவிட்டாள். அவளுக்கு வரன் தேடவேண்டும்.
வரன் தேடுவது பெரியாழ்வாருக்குச் சுலபமான
காரியமாக இருக்கவில்லை.
சமயங்களிலே சமணமும் புத்தமும் பெண்ணோடு சம்பந்தப்பட்ட வாழ்க்கையை முற்றாக நிராகரித்திருந்தன.
இறைவனை அடைவதற்குப் பெண்கள் தகுதியானவர்கள் இல்லை என்பது இவர்களின் வாதமாக இருந்தது.
இந்த நிலையைப் புரிந்த சைவமும் வைஸ்ணவமும் எதிர் நிலையெடுத்து பெண் சம்பந்தப்பட்ட காதலுக்கும் காமத்துக்கும் பச்சைக் கொடி காட்டின. ஆனாலும் பெண் பெண்ணாக குரல் கொடுப்பதை மறைமுகமாகத் தவிர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.
அதாவது ஒரு பெண்ணுக்காக ஆண் குரலெழுப்பலாமேயொளியப் பெண் தன் உரிமைக்காகக் குரலெழுப்புவது அந்தக் காலத்தில் வேண்டத்தகாததாக இருந்தது.
சாதிப் பிரிவினைகளையும் சமயவிதிகள் மூலமாக நிரந்தரமாக்கினர். பெண் அடிமைத்தனத்தையும் மறைமுகமாக நிரந்தரமாக்கினர்.
இந்தச் சமயங்களின் சமூகத் தலையீடுகள்
ஆண்டாளையும் பாதிக்கவே செய்தன.
சிறுவயதிலேயே தமிழைக் கையாள்வதில்
திறமையுள்ளவளாக விளங்கிய ஆண்டாள் தன் பதினைந்து வயதிலேயே அழகான கவிதை எழுதும் திறமை பெற்றிருந்தாள்.
ஆண்டாளின் காலத்தில் காதல் திருமணங்களைவிட பெற்றார் பார்த்துச் செய்யும் திருமண முறையே வலிமை பெற்றிருந்தது.
ஆண்டாள் பெற்றார் பார்த்துச் செய்யும் திருமணத்தில் அசையாத நம்பிக்கை கொண்டவளாக இருந்தாள்.
அன்றைய போக்கும் அப்படித்தான் இருந்தது.
காதல் திருமணத்தைவிட பெற்றார் பார்த்துச் செய்யும் திருமணத்துக்கு முக்கியத்துவம்
அதிகமாக இருந்தது.
பலர் ஆண்டாளின் அழகுக்காகப் பெண்கேட்டு
வரத் தொடங்கினார்கள்.
இந்தப் பெண் பார்க்கும் படலம் ஆண்டாளுக்குப் பிடித்தே இருந்தது.
ஒவ்வொரு தடவையும் அவர்கள் வரும்போது
மாப்பிள்ளைகளைப் பார்த்து மானசீகமாக ரசிப்பாள். வருபவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டாளின் பிறப்பு ரகசியத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களாகவே இருந்தார்கள். வெளிப்படையாகச் சொன்னால் தாய் தகப்பன் இல்லாத ஒரு அனாதையாகவே அவளைப் பார்த்தார்கள். கடவுளின் குழந்தையெனப் பெரியாழ்வாரும் மனைவியும் எவ்வளவோ எடுத்துரைத்தும் அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை.
முறைப்படி திருமணம் செய்யாத இருவருக்குப் பிறந்த குழந்தையாகவே அவளைப் பார்த்தார்கள்.
இவர்களின் விமர்சனங்களும் நையாண்டிகளும் அதனால் தன்னை வளர்த்தவர்கள் படும் துன்பங்களும் அவளுக்குள் ஒரு பொறியை உருவாக்கி இருக்க வேண்டும்.
எந்த ஆண்களைப் பார்த்து ரசித்துத் தனக்குக்
கணவனாகப் போகின்றானோ என்று நினைத்து
நினைவில் படுக்கையறைவரைக்கும் அழைத்துச் சென்றாளோ அதே ஆண்களை வெறுப்போடு பார்க்கத் தொடங்கினாள்.
அவர்கள் மீது அவளுக்கொரு வன்மம் உருவாகத் தொடங்கியது.
சிறுவயதிலிருந்தே பெரியாழ்வோரோடு வாழ்ந்ததால் தினமும் ஆலயத்துக்குச் செல்வதும் அதன்பின் அவர் நிகழ்த்தும் உபந்நியாசங்களுக்குச் செல்வதும் அவள் வழக்கமாக இருந்ததால் பல கடவுளர்களின் கதைகள் உள்ளத்தில் பதிந்திருந்தன.
ஆண்களுக்கெதிரான வன்மம் இந்தக் கதைகளினூடாகப் பீறி எழுந்தன.
கண்ணன் பல பெண்களோடு சல்லாபம் இடுவதும்
பெண்கள் அவனின் சல்லாபத்துக்காகக்
காத்திருப்பதும் அவளுக்கு வியப்பைக் கொடுத்தன.
மகாபாரதத்தில் பாஞ்சாலியை ஐவரையும் பகிரும்படி சொல்வதும் அதற்கேற்ப பாஞ்சாலியும் ஐவருக்கும் மனைவியாக வாழ்வதும் அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
இதைக் கதையாகப் பெரியாழ்வார் சொல்லும் பொழுது அதை ரசித்து மோகித்து இன்பமுறும் ஆண்களையும் பெண்களையும் பார்த்து வெறுப் படைந்த அவளின் ஆண்கள் மீதான வன்மம் வேறொரு திசையில் பயணிக்கத் தொடங்கியது.
பெண்ணைப் போகப் பொருளாகவும் அடிமையாகவும் பார்க்கும் ஆண்களையும் அதற்குத் தூபம்போடும் சமயத்தையும் கடவுளர்களையும் வேறுபட்டவிதமாகப் பார்க்கத் தொடங்கினாள்.
மனிதர்களை வெறுக்கத் தொடங்கினாள்.
மனிதர்களுடனான கல்யாணம் என்ற பந்தத்தை
அறவோடு வெறுத்தாள். தன்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்த கடவுளைப் பழிவாங்கவேண்டுமென்ற உணர்வு அவளுள் கிளர்ந்தெழுந்தது.
காதல் திருமணத்தை வெறுத்த அந்தச் சமூகத்தில் கோபம் கொண்டு கடவுளையே காதலிக்கத் தொடங்கினாள்.
சிறுவயதிலிருந்தே திருமால்மேல் காதல் கொண்டதாகவும் மானிடர்கள் தனக்கு ஒரு
பொருட்டல்ல என்றும் தன் செயலால் உலகுக்குத் அறிவித்தாள்.
பெண்களை அடிமைகளாகப் பார்க்கும் ஆழ்வார் சமூகத்தை அறவோடு வெறுத்தாள்.
அவளுடைய இந்தப் போக்கால் கலங்கிப்போன பெரியாழ்வார் செய்வதறியாது திகைத்தார்.
பாலியல் கருத்துக்களையெல்லாம் சர்வ சாதாரணமாக கவிதை மூலமாகக் கதைத்தாள்.
அவள் தன் பாலியல் எண்ணங்களை கனவாக
வெளிப்படுத்திய தோடல்லாமல் அதனோடு திருமாலைத் தொடர்புபடுத்தியமை பெரியாழ்வாரைச் சினங் கொள்ள வைத்தது. காமம் சம்பந்தப்பட்ட விடயங்களை பெண்கள் உரைப்பதும் ஆழ்வார்களால் தடை செய்யப்பட்டே இருந்தது.
இவளின் இச் செய்கைகளால் பெரியாழ்வார்
வெளிப்படையாகவே அவளைக் கடிந்து கொண்டார். மக்களும் இவளின் கடவுள் மேலான காதலை விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.
அபச்சாரம் என்றனர். அவர்கள் எதிர்க்க எதிர்க்க படுவேகமாக எதிர் வினையாற்றினாள்.
சாடைமாடையாகப் பெரியாழ்வாரைக் கிண்டல் செய்யவும் தொடங்கினர்.
மொத்தத்தில் அவளுக்குக் கல்யாணம் சரிவராததால் மூளைபிசகி விட்டதெனக் கதைக்க ஆரம்பித்துவிட்டனர்.
இது ஆண்டாளை இன்னும் ஆண்களுக்கெதிராகக் கிளர்ந்தெழ வைத்துவிட்டது.
ஆனாலும் அவளின் கவிதைகள் எல்லாம் ஒரு பெண் ஆண் மீது கொண்ட காதலின் உச்ச நிலையையே பிரதிபலித்தன. இதனைத் திருமால்மேல் கொண்ட பக்தியால்தான் அப்படி எழுதுகிறாள் என்று ஒரு கூட்டம் கூறினாலும் அப்படி அல்ல என அவளின் கவிதைகள் வாதிட்டு நின்றன.
ஆண்டாளின் காலத்தில் ஒரு ஆண்தான் காதல்
இன்பத்தை வெளிப்படையாக கூறலாம் என்ற வழமை இருந்து வந்தது.
ஆண்டாள் இதனை உடைத்தாள். ஆண்களுக்கெதிராக ஆண்டாள் எழுப்பிய முதல் யுத்தபேரிகை அவளின் காமரசம் பொங்கும் காதல்
கவிதைகள்.
அவளின் இந்த நடக்தையால் ஆழ்வார் சமூகம் திடுக்கிட்டது.
ஆண்களே பெண்களாகத் தம்மைக் கற்பனை செய்து பெண்களுக்காகக் குரல் கொடுப்பதாகப் பாவனை செய்த ஆழ்வார் சமூகம் சற்றுத் திடுக்கிட்டது.
பெண்ணே பெண்ணின் குரலாக எழுந்ததால் ஆழ்வார் சமூகம் கொதித்தது. பெண்கள்மேல் தாங்கள் கொண்டு வந்த ஆதிக்க சாம்ராஜ்ஜியம் உடைந்து விடுமோ எனக் குழம்பினர்.
இந்தக் குழப்பம் ஆண்டாளுக்கெதிரான யுத்தமாக மாறியது.
பெரியாழ்வாரே திருமாலுக்கான மாலைகளைப் புனைவார்.
ஆண்டாள் அதனைக் கொண்டு வந்து ஆலயத்தில் கொடுப்பது வழக்கம்.
அன்று மாலையைக் கொடுக்க முன்பு அந்த
மாலையைத் தனக்குப்போட்டு தன் காதல் மணாளனாக திருமாலை நினைத்து உள்ளுக்குள் சந்தோசம் அடைந்தாள்.
ஒவ்வொரு நாளும் இதனைச் செய்தாள்.
இந்தச் செயலும் அவள் மரபைச் சின்னாபின்ன மாக்கிய ஒரு செயலே. இவள் இப்படிச் செய்வதை அவதானித்த ஆலயத்திலுள்ள ஆழ்வார் ஒருவர்
சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்தி ஊர் முழுக்கப் பரப்பிவிட்டார்.
ஊரே ஆண்டாளுக்கெதிராகக் கொந்தளித்தது.
பெரியாழ்வார் கூடத் தன் வர்க்கத்தின் பின்னால் தான் நின்றார். மகள் என்ற உறவு கூட அங்கே செல்லாக் காசாகி விட்டது.
அச்சம் மடம் நாணம் பெண்களுக்கே உரியதென்ற கோட்பாட்டைத் தூக்கி எறிந்தாள் ஆண்டாள்.
ஆழ்வார் சமூகம் கலங்கியது.
ஆண்வர்க்கத்தால் அவளின் பிறப்பைக்காட்டித்
தூக்கி எறியப்பட்ட தன் உணர்வுகளை திருமால்மேல் காதலாக்கி அந்த உணர்வுகளை எவ்வித நாணமு மின்றி எழுதிக் குவித்தாள் ஆண்டாள்.
இவளின் வெளிப்படையான இந்த யுத்தம் ஆழ்வார் சமூகத்தைக் கோபமுறச் செய்ததோடு சிந்திக்கவும் செய்தது. சதிக்கான திட்டமிடல் ஆரம்பமாகியது.
அவளின் இந்த யுத்தத்தை அவளின் பாணியிலேயே சென்று தீர்க்கத் தீர்மானித்தார்கள்.
பக்தியாக மாற்றினார்கள்.
அவளைக் கடவுளாக்கினார்கள்.
திட்டமிட்டசதி அரங்கேறியது.
அருவருப்புக்குரியவளாக இருந்த அவளை அவதாரமாக்கினார்கள்.
அருவருப்புக்குரிய அவளின் பிறப்பை
அற்புதமானது என்றார்கள்.
அவளின் யுத்தபேரிகையை தாரைதப்பட்டை
யாக்கினார்கள்.
அவளைக் கையெடுத்துக் கும்பிட வைத்தார்கள்.
சமய உலகத்தில் எந்த ஒரு பெண்
தலையெடுக்கிறாளோ அவளை வலுக் கட்டாயமாகக் கடவுளாக்கி அடக்குவதில் வெற்றி கொண்ட ஆதிக்க வர்க்கம் ஆண்டாளையும் விட்டு வைக்கவில்லை.
எப்படி காரைக்காலம்மையாரை இளம் பருவத்தி லிருந்து முதுமைப் பருவத்திற்கு மாற்றிச் சீரழித்தார்களோ அதே பாணியில் ஆண்டாளையும் அழித்துவிடத் தீர்மானித்தார்கள்.
தனி ஒரு ஆளாக யுத்தம் செய்த ஆண்டாள்
கலங்கினாள். அவள் பின் வாங்கவில்லை.
தொடர்ந்து யுத்தம் புரிந்தாள்.
ஒரு நாள் மூலஸ்தானத்திற்குள் போன அவள் திரும்பி வரவேயில்லை.
ஆண்டவனுடன் ஐக்கியமாகி விட்டதாகக் கூறினார்கள்.
பெண்களுக்காகப் பெண் குரலாகவே எழுந்த குரல் திட்டமிடப்பட்டு அடக்கப்பட்டுவிட்டது.
_கரவை மு தயாளன்_
(லண்டன் )