(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் தேசிய மாவீரர் தினம் செவ்வாய்கிழமை மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
வாகரைப் பிரதேச இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் தின நினைவு கூரலின் போது வீரமரணம் எய்திய மாவீரர்களுக்கு மூன்று நிமிடம் மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டதுடன், மாவீரர்களின் உறவுகள் கண்ணீர் மல்க மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து வாகரைப் பிரதேசத்தின் மாவீரர் தாய் ஒருவரினால் மாவீரர் ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், கலந்து கொண்ட அனைவராலும் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
வாகரைப் பிரதேசத்தில் கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் பாதுகாப்பு பிரிவினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இடம்பெற்ற தேசிய மாவீரர் தினத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
வாகரைப் பிரதேச இளைஞர்களின் ஏற்பாட்டில் மாவீரர் துயிலும் இல்லத்தில் தேசிய மாவீரர் தினத்தினை முன்னிட்டு புதிதாக கல்லறைகள் அமைக்கப்பட்டு வந்த நிலையில் பாதுகாப்பு பிரிவினரால் அவை அனைத்தும் கொண்டு செல்லப்பட்டதாக மாவீர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தரவை, மாவடிமுன்மாரி, தாண்டியடி, வாகரை ஆகிய 4 இடங்களிலும் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் தேசிய மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
