மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சேவையாற்றக்கூடிய மாவட்ட ரீதியிலான இளைஞர் குழுவொன்றினை உருவாக்கி குறித்த குழுவினை சமூகத்திற்கு அறிமுகம் செய்து, அக்குழுவிற்கான பெயர் சூட்டும் நிகழ்வு நேற்று (12) திகதி மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி மயூரி ஜனன் தலைமையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்விற்கு செவிப்புலன் வலுவற்றோர் சங்கத்தின் தலைவர் பூபாலப்பிள்ளை கஜதீபன், செவிப்புலன் வலுவற்றோர் சங்கத்தின் போசகர் க.பிரதீபன், அருவி பெண்கள் வலையமைப்பின் பிரதி இணைப்பாளர் தர்சினி ஸ்ரீகாந்த், அருவி பெண்கள் வலையமைப்பின் இரண்டாம் கட்ட "அக்கா" செயற்குழு உறுப்பினர்கள்
உள்ளிட்ட மேலும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பானது கடந்த மூன்று வருடங்களாக மேற்கொண்ட பாரிய முயற்சியின் பயனாகவே சிறந்த ஆளுமை திறன்மிக்க மட்டக்களப்பு மாவட்ட சமூகத்திற்கு சேவையாற்றக்கூடிய 100 இளைஞர்கள் இனங்காணப்பட்டு சமூகத்திற்காக இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு இந்நிகழ்வின்போது இவ்வாறு இனங்காணப்பட்டுள்ள இளைஞர் குழுவிற்கு "PRIYM" (Prompting Resilience in Youth Minds) எனும் நாமம் சூட்டப்பட்டதுடன், அருவி பெண்கள் வலயமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிதிகளினால் "PRIYM" எனும் நாமம் பொறிக்கப்பட்ட Cake வெட்டப்பட்டு "PRIYM" இளைஞர் குழு அங்குரார்ப்பனம் செய்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது அதிதிகள் வரவேற்பு புடன் ஆரம்பிக்கப்பட்டு மங்கள விளக்கேற்றப்பட்டதுடன், இளைஞர் யுவதிகளின் கலைப்படைப்புக்கள் அரங்கேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிதிகள் உரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்ட சமூக செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைக்கும் ஒரு சமூக செயற்பாடாகவே தாம் இதனை பார்ப்பதுடன் அதற்காவே இவ் இளைஞர் குழுவினை தாம் மிகுந்த சிரமத்தின் மத்தியில் உருவாக்கியதாக இதன்போது அருவி பெண்கள் வலயமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி. மயூரி ஜனன் தெரிவித்துள்ளார்.