கிழக்கின் கலங்கரை விளக்காக அமைந்து, திறன் மிக்க எதிர்கால தலைவர்களை உருவாக்கும் ஓர் முக்கிய நிறுவனமாக கிழக்கு பல்கலைக்கழகம் திகழ்கின்றது.
சூழலியல் மாற்றங்கள் காரணமாக பல்வேறுபடட சமூக பொருளாதார சிக்கல் நிலைகளிற்கூடாக கடந்துவந்த இளைஞர் சமுதாயம், தமக்கும் தாம் சார்ந்த சமூகத்திற்கும் இடையிலான இடைவெளியையும் வறிதாகும் பொதுப்பரப்பையும் உணர்ந்துகொள்ள முடியவில்லை.
இந்நிலையில் கல்விச்சமூகம் ஒன்றை உருவாக்கும் பல்கலைக்கழகம் தன்பால் சுமத்தப்படட பெரும் பணியாக இச்சமூக இடைவெளியை நிரப்பும் செயற்பாடை கருதுகின்றது. இதன் ஓர் அங்கமாக சமூகம் மற்றும் தொழில்சார் துறைகளை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் நிலையத்தின் திறப்புவிழா பல்கலைக்கழக வளாகத்தினுள் இடம்பெற்றது.
பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களின் தலைமையில், நிலையத்தின் இயக்குனர் வைத்தியகலாநிதி கந்தசாமி அருளானந்தம் அவர்களின் வழிநடத்தலில் நடபெற்ற நிகழ்வில் பீடாதிபதிகள், பதிவாளர், நிதியாளர் மற்றும் ஏனைய நிலையங்களின் இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் தலைமை உரையில், பல்கலைக்கழகம் தான் சார்ந்த சமூகத்தை புரிந்து செயற்படுவதன் முக்கியத்துவம் பற்றியும், இவ்வாறான ஓர் சேவை பல்கலைக்கழகத்தின்மூலம் இதுவரை வழங்கப்படாத இடைவெளி உள்ளதாயும், தற்கால பொருளாதார சூழலில் எவ்வாறு தனது சமூக பொறுப்பை கையாள வேண்டும் என்பது பற்றியும் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து இந்நிலையத்தின் தற்கால தேவைப்பாடு மற்றும் ஆரம்பித்துள்ள செயற்பாடுகள் பற்றியும், சமூக மற்றும் தொழிற்றுறை சார் முன்னெடுப்புகள் , ஒன்றிணைந்த மாதிரிக்கிராம வேலைத்திட்டம் தொடர்பாகவும் இயக்குனர் கருத்துரைத்தார்.
சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட ஏறாவூர் பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ஸ்ரீநாத் அவர்கள் தமது பூரண ஒத்துழைப்பை இந்நிலையத்தின் செயற்பாடுகளிற்கு வழங்குவதாகவும் தற்கால சூழலில் ஏற்பட கூடிய மந்தபோஷாக்கு நிலைமை பற்றியும் அதற்க்கு இந்நிலையத்தின் பங்களிப்புபற்றியும் விரிவாக விளக்கினார்.
தொடர்ந்து இடம்பெற்ற பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்விசாரா உத்தியோகஸ்தர்களிற்க்கான மரக்கறி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
பொதுமக்கள் தமது எவ்விதமான தொழிநுட்ப ஆலோசனைகளையும் கள விஜயங்களையும் பல்கலைக்கழகத்தின் மூலம் பெறலாம் என்பதோடு பல்கலைக்கழகத்தை சமூகத்துடன் இணைக்கும் இப்பணியானது சகல தரப்பினரதும் ஓத்துழைப்புடன் நீண்டு தொடரும் என்பது திண்ணம்.