எதிர்வருகின்ற மாகாணசபை தேர்தலில் தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஓர் தலைமையில் போட்டியிடுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் பத்மநாபா மன்றம் ஈ.பி.ஆர்.எல்.எப், முன்னாள் கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்
தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “மாவட்டத்திலுள்ள நான்கு இலட்சம் வாக்குகளில் அண்ணளவாக ஒரு இலட்சம் வாக்குகள் முஸ்லிம் வாக்குகளாகவும். மூன்று இலட்சம் தமிழ் வாக்குகளில் இரண்டேகால் இலட்சம் தமிழ் வாக்குகளை அளித்து சிறப்பான திறமை மிகுந்த நான்கு தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்துள்ளமை எம் தமிழினத்திற்கு கிடைத்த ஒரு வெற்றியாகும். எமது தமிழ் மக்கள் வாக்களிப்பின் ஊடாக தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்கு முயற்சிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்னும் செய்தி இத்தேர்தல் மூலம் சொல்லப்பட்டுள்ளது.
ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்து அதன் ஊடாக எமது உரிமைகளைப் பெற முடியும் என்பதற்காக அனைத்து தமிழினமும் ஓன்று சேர்ந்து போராட்டத்தை வலுவூட்டியதே வரலாறாகும். இந்த நிலையில் ஆயுதப்போரட்டம் நடந்த கால கட்டத்தில் தேர்தலில் வாக்களிப்பில் நம்பிக்கை இழந்த நமது சமூகம் ஆயுதப் போரட்டம் மௌனிக்கப்பட்டதற்குப் பிற்பாடு ஜனநாயக ரீதியான போராட்டத்தை அரசியல் வெகுஜன ரீதியான உரிமைகளைப் பெறுவதற்கு தங்களிடமுள்ள ஒரு வாக்கை ஒவ்வொருவரும் பயன்படுத்தி வெற்றி கொள்ள முடியும். என்ற முன்னேற்றகரமான செயற்பாட்டுக்கு வந்ததென்பது ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்த எமக்கு கிடைத்த பெரிய வெற்றியாகும்.
அவைமட்டுமின்றி பன்முகத்தன்மை கொண்ட நான்கு தமிழ் பிரதிநிதிகளைத் தெரிவு செய்தமை எமது சமூகத்திற்கு நன்மையே தவிர தீமை அல்ல. தமிழ்த்தேசியம் தொடர்பாகவும்,அபிவிருத்தி தொடர்பாகவும் கடந்த காலங்களில் மௌனமாக இருந்தாலும் இன்றைய மாறிவரும் உலகு ஓழுங்கிற்கு அமைவாகஇன்றைய சூழ்நிலையில் தமிழ்த்தேசியமும் பாதுகாக்கப்படுவதோடு அபிவிருத்தி தொடர்பாகவும் ஆளுமை செலுத்துவதற்குரிய அதிகார அரசியலை அமுல் படுத்துவதற்காகவும் மக்கள் முன் வந்தது ஒரு ஆரோக்கியமான சூழலாகும்.
கடந்த காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்த பலம், பலவீனம் காரணமாகவும், சரியான முறையில் திட்டமிட்டு செயல்படாததன் காரணமாகவும்
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எடுத்த வாக்குகளை விட 45ஐயாயிரத்திற்குக் குறைந்த வாக்குகள் பெறப்பட்டுள்ளன. ஆனால் கடந்த உள்ளூராட்சி சபையில் அண்யளவாக எடுக்கப்பட்ட 80.000ஆயிரம் வாக்குகளுக்குச் சமனாக இம் முறையும் அண்ணளவாக 80,000ஆயிரம் வாக்குகள் பெற்றுக்கொண்தென்பது கடினமான உழைப்பாளிகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.இந்த விடயத்தை முன்னிறுத்தி கடந்த காலங்களில் செய்த தவறுகளை சுயவிமர்சனம் செய்து கொண்டு எதிர் காலத்தில் அத் தவறுகளை விடாமல் இருப்பதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இம் மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட நான்கு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகளும் ஆற்றலுடையவர்கள்,பண்பானவர்கள், செயற்திறன் மிக்கவர்கள் என்ற வகையில் தமிழ்சமூகம் சார்ந்த பொதுவான விடயங்களில் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கான செயல்வடிவங்களை முன்னிறுத்தி செயற்பட வேண்டும்.
இத்தோடு எதிர்வருகின்ற மாகாணசபை தேர்தலில் கூட தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஓர் தலைமையில் போட்டியிடுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு கட்சி தோழர்களுடன் உரையாற்றும் போது அறைகூவல் விடுத்தார்.