யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பீடங்களின் விடுதியில் உள்ள இறுதி ஆண்டு மாணவர்கள் அனைவரும் பரீட்சைகள் நிறைவடையும் வரை வளாகத்தைவிட்டு வெளியேற முடியாது என்று மத்திய சுகாதார அமைச்சால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களும் வளாகத்துக்குள் நடமாட முடியும் என்றாலும் எந்தவொரு மாணவரும் வளாகத்தைவிட்டு வெளியேறி மீள வளாகத்துக்குள் வரமுடியாது என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள விவசாயம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பீடங்களின் பரீட்சை நடவடிக்கைகள் நாளை வழமைக்குத் திரும்பும் என்று வளாகத்துக்குப் பொறுப்பான பிரதிப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள தொழில் நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தை மீளத் திறந்த இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பரீட்சையை நடத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாட்டுடன் சுகாதாரத் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு விடுதியில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்கியிருக்க முடியும் என்றும் மாணவர்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.