பொதுத் தேர்தலின் போது பின்பற்றப்பட வேண்டிய வர்த்தமானியை வெளியிடுவதில் தடையை ஏற்படுத்துபவர்கள், ஒட்டுமொத்த நாட்டுமக்களினதும் எதிரியாகவே வரலாற்றில் பதியப்படுவார்கள் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினாலும், சுகாதார சேவையாளர்களினாலும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், வர்த்தமானியை வெளியிடாத வரையில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுத்தேர்தலின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகள் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் கோரிக்கையை உரிய அதிகாரிகள் செவிமடுக்க வேண்டும் என்றும் கரு ஜயசூரிய கேட்டுக்கொண்டார்.
அவசரநிலைமைகள் ஏற்படும் பட்சத்தில், அதுகுறித்து விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும் என சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் சபாநாயகர் நாட்டின் பொருளாதாரம் மீண்டுமொரு முழுமையான முடக்கத்தை எதிர்கொள்ளத்தக்க நிலையில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.