திருகோணமலை சபிரிகமக் அபிவிருத்தி திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 546 வேலைத்திட்டத்திற்கு 460 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கூட்டம் இன்று (சனிக்கிழமை) மாவட்ட செயலகத்தில், அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது குறித்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த அசங்க அபேவர்தன, “ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் 2020ம் ஆண்டில் திருகோணமலை மாவட்டத்தில் சபிரிகமக் அபிவிருத்தி திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 546 வேலைத்திட்டத்திற்கு 460 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கு 2மில்லியன் ரூபாய் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டு பல வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிராம உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 37 வேலைத்திட்டங்களுக்கு 20 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு, 7 வேலைத்திட்டம் பூர்த்திடைந்துள்ளன. ஏனையவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்