மக்களின் அரசியல் சிந்தனைகளைத் திசைதிருப்பும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் அரசாங்கம், எம்.சி. சி. ஒப்பந்தம் ஊடாக யார் நிதியை பெற்றுக் கொண்டார்கள் என்பதை மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கந்தானையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற அக்கட்சியின் தொகுதி அமைப்பாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தபோதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
மேலும், நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தம் பெரிதளவில் பேசப்பட்டதாகவும் குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்டவர்கள் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்தார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எம்.சி.சி. ஒப்பந்தத்தில் இரண்டு கட்டங்கள் கைச்சாத்திடப்பட்டு அதனூடாக 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கப் பெற்றதாக குறிப்பிடும் தரப்பினர்கள், சரியான காரணங்களை முன்வைக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கத் தூதரகம் 10 மில்லியன் நிதி கிடைக்கப் பெற்றதாக தற்போது முன்வைக்கும் குற்றச்சாட்டை மற்றுத்துள்ளதையும் சுட்டிக்காட்டிய அவர், இந்த ஒப்பந்தம் மூலம் நிதி பெற்றுக்கொள்ள முதலில் நடவடிக்கைகளை முன்னெடுத்தவர் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவே எனத் தெரிவித்துள்ளார்.