தேர்தல் ஆணைக்குழுவின் புதிய சட்டத்திட்டத்திற்கு அமைய செல்வந்தர்கள், பண பலமிக்கவர்கள், கோடீஸ்வரர்கள் மாத்திரமே இம்முறை நாடாளுமன்றத்திற்குச் செல்லமுடியும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதான அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சஜித் பிரேமதாசவின் படம் பொறிக்கப்பட்ட பதாகையை அப்புறப்படுத்துமாறு தேர்தல் அதிகாரிகள் நேற்று அறிவித்திருந்தனர். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “தேர்தல் ஆணைக்குழு தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு விதித்துள்ள புதிய சட்டவிதிகள் மிகவும் அநீதியானது. குறிப்பாக, தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளங்களில் தேர்தல் பிரசார விளம்பரங்களை வெளியிடத் தடையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கிராமத்தில் உள்ள அலுவலகங்களில் பிரசார பதாகைகளை வைக்க அனுமதியில்லை என அவற்றை அப்புறப்படுத்துகின்றனர்.
அப்படியானால், செல்வந்தர், கோடீஸ்வரர்களுக்கே நாடாளுமன்றத்திற்குச் செல்ல முடியும்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.