தவணை முறையில் வாகனங்களை கொள்வனவு செய்தவர்களுக்கு கடன் தவணை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட நிவாரணம் உரிய முறையில் நடைமுறைப் படுத்தப்படுகின்றதா என்பது குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.
இது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டு செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொருளாதார செயற்பாடுகள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதனால் பாதிக்கப்பட்ட குழுக்களுக்கு அரசு பல நிவாரணங்களை வழங்கியது.
ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் கடந்த மார்ச் 23ஆம் திகதி வெளியிடப்பட்ட PS/CSA/16/2020 ஆம் இலக்க சுற்றறிக்கையின் இரண்டாம் பிரிவில் முச்சக்கரவண்டி உரிமையாளர்களினால் செலுத்தப்பட வேண்டிய லீசிங் கடன் தவணையை அறவிடுவதை ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.
ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் மார்ச 30ஆம் திகதி நிதியமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட PS/CSA/18/2020 ஆம் இலக்க சுற்றறிக்கையின் 09வது பந்தியில் முச்சக்கர வண்டிகள், ட்ரக் வண்டிகள், பாடசாலை பேருந்துகள் மற்றும் வான்கள், சுயதொழிலுக்காக பயன்படுத்தப்படும் கார்கள் போன்ற சுயதொழில்களில் ஈடுபடும் பதினைந்து லட்சம் வாகனங்களுக்கு தவணை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.
இவ்வாறான நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் சில லீசிங் நிறுவனங்களும் நிதி நிறுவனங்களும் கடன் தவணை செலுத்தத் தவறுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வது அரசின் உத்தரவை மீறும் செயலாகும் என்றும் அது சட்டவிரோத நடவடிக்கை என்பதால் அதனை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (12) பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.
கடன் தவணை செலுத்தாமை பற்றி லீசிங் நிறுவனங்களில் இருந்து கிடைக்கப்பெறும் எந்தவொரு முறைப்பாட்டையும் ஆறு மாத நிவாரண காலப்பகுதி நிறைவுபெறும் வரை பொறுப்பேற்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி, பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு பணிப்புரை விடுத்தார்.
மேலும் வாகனங்களை பறிமுதல் செய்ததன் பின்னர் முறையிடுவதும் சட்ட விரோதமானது என்பதால் அத்தகைய முறைப்பாடுகளை பொறுப்பேற்க வேண்டாம் என ஜனாதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்” என்றுள்ளது.