பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “பொதுத் தேர்தலொன்றை நிச்சயமாக நடத்தியே ஆகவேண்டும். இதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரும் தயாராகிக் கொள்ள வேண்டும். இது அவரின் பொறுப்பாகும்.
தேர்தலை நடத்தத்தான் ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுத் தேர்தலுக்கான பணிகளுக்கு அவர்கள் தயார் நிலையில்தான் இருக்க வேண்டும். நீதிமன்றில் தீர்ப்பு வந்தவுடன், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலை நடத்த வேண்டாம் என எதற்காகக் கூறுகிறது என்று உண்மையில் தெரியவில்லை. நாம் எதிரணில் இருக்கும்போது தேர்தல்களை நடத்துமாறுத்தான் வலியுறுத்தி வந்தோம். உண்மையில், தேர்தலின் ஊடாக அரசாங்கத்தை கவிழ்ப்பது தான் எதிர்க்கட்சிகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.
அத்தோடு, அரசாங்கம் தான் தேர்தலை பிற்போட நடவடிக்கைகளை எடுக்கும். ஆனால், இங்கு அனைத்தும் தலைக்கீழாகத்தான் இடம்பெறுகின்றன. இதனை மக்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கும் தெரியும் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்று.
அதேநேரம், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நாம் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம். எம்மைப் பொறுத்தவரை இந்த விடத்திற்கு பொறுப்பான இரண்டு- மூன்று நபரைக் கைது செய்வதல்ல நோக்கமாகும்.
இதன் பின்னணியைக் கண்டறியவேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்னர், இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடைபெறும் என முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஒருவரை கைது செய்து தற்போது விசாரித்து வருகிறோம். இவ்வாறு நாம் இந்த விடயத்தில் மிகவும் தீவிரமாகவே செயற்பட்டு வருகிறோம்.” என கூறினார்.